logo
புதுக்கோட்டை பிராணிகள் வதை தடுப்பு சங்கத்துக்கு  புத்துயிரூட்டப்படுமா? -  பிராணிகள்  நல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை பிராணிகள் வதை தடுப்பு சங்கத்துக்கு புத்துயிரூட்டப்படுமா? - பிராணிகள் நல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

26/Jul/2021 08:18:19

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கிப்போயுள்ள பிராணிகள் வதை தடுப்புச்சங்கத்துக்கு மாவட்ட ஆட்சியர்  புத்துயிரூட்ட  வேண்டுமெ சமூக ஆர்வலர்கள், விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் பிராணிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. மத்திய அரசின் சுற்றுப்புறத் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ள பிராணிகள் நல அமைப்பின் வழிகாட்டுதலின்படி இந்த சங்கங்கள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு செயல்பட்ட இந்த அமைப்பின் துணைத் தலைவர்களாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஆகியோரும், செயலாளராக மாவட்ட கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநரும் செயல்பட்டனர்.

நிர்வாக செயலாளராக கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநரும், நிர்வாக துணைச் செயலாளராக கால்நடை உதவி மருத்துவரும், செயற்குழு உறுப்பினர்களாக நகராட்சி ஆணையர், கோட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வனத்துறை அதிகாரி, துணை இயக்குநர்(பொது சுகாதாரம்), சுகாதார அலுவலர் (மதுரை மாநகராட்சி) மற்றும் பிராணிகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் என சுமார் 16 பேர் இடம்பெற்றிருந்தனர். 

ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2010 வரை செயல்பட்டு வந்த  பிராணிகள் வதை தடுப்பு சங்கம் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிப்போயுள்ளது. அதனால், பிராணிகள் வதை தொடர்பாக புகார் தெரிவிப்பதும், அதன்மீது  நடவடிக்கை எடுப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் விலங்குகள் ஆர்வலர்களிடம் ஆதங்கம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும், பிராணிகள் வதை தடுப்புசங்க முன்னாள் நிர்வாகியுமான ஜி.எஸ்.தனபதி கூறியதாவது:

2002 -இல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக ஷம்புகல்லோலிகர்  இருந்தபோது பிராணிகள் வதை தடுப்பு சங்கம் தொடங்கப்பட்டது. அதில், புலவர் மலையப்பன், சீனிவாசரெட்டியார். முன்னாள் எம்பி ராஜாபரமசிவம், நான் உள்பட வெளியிலிருந்து 6 பேரு்ம் அரசு தரப்பிலிருந்து 10 பேர் உள்பட மொத்தம் 16 பேரைக் கொண்ட சங்கம் உருவாக்கப்பட்டது.

 மாவட்டம் முழுவதும் 5 லட்சத்தும் மேல்பட்ட  கால்நடைகள் உள்ளன. வேளாண் மற்றும் இதர தேவைகளுக்காக கால்நடை வளர்ப்போர் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மாடு, குதிரை இழுக்கும் வண்டியில் அதிக பாரம் ஏற்றக் கூடாது.

ஆடு, மாடுகளை பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில்  அலைய விட கூடாது. கால்நடைகளுக்கு முறையாக உணவு வழங்க வேண்டும். வளர்ப்பு நாய்களை  சாலையில்  அவிழ்த்து விடக் கூடாது. பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ய கூடாது.நோய் தாக்கிய கால்நடைகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கச்செய்வது.

தெரு நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவைச்சிகிச்சை, வெறி நோய் தடுப்பூசி போடுவது, சிறந்த கால்நடைகளுக்கு பரிசளிப்பது, பள்ளி மாணவர்களுக்கு பிராணிகள் வதை தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் போன்ற பணிகளில் இந்த சங்கம் ஈடுபட்டது 

 குறிப்பாக, வாகனங்களில் ஆடு, மாடுகளை ஏற்றிச் சென்றால் அவற்றுக்கான முதலுதவி மருத்துவ வசதி, தண்ணீர், தீவனம் இருக்க வேண்டும். இவை பின்பற்றப்படவில்லை என்றால் அதைக் கண்காணித்து தடுப்பதற்கு பிராணிகள் வதை தடுப்பு சங்கம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

இது குறித்து, மூத்த வழக்குரைஞரும், பிராணிகள் வதை தடுப்பு சங்க முன்னாள் உறுப்பினருமாான ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:  புதுக்கோட்டை நகரில்  சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால்  பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும்,  போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது.

புதுக்கோட்டை  வடக்கு 4-ஆம் வீதியில்  சாலையில் நடந்து சென்ற அரசு ஊழியர் தெருவில் திரிந்த மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் உதாரணம். பிராணிகள் வதை தடுப்பு சங்கம் செயல்பாட்டுக்கு வந்தால் இது  போன்ற சம்பவங்களை தடுக்க முடியும். புதுக்கோட்டையில் மாபெரும் கோசாலை அமைத்து  சாலையில் சுற்றித்திரியும் கைவிடப்பட்ட, மாடுகள், நாய் போன்ற பிராணிகளை அதில் அடைத்து பாதுகாக்க வேண்டும் .

வீதிகளில் சாலைகளில் ஆடு, மாடுகளை உலவ விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, புகார் அளிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்பட்டு வந்த பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தை மீண்டும் செயல்படுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஜல்லிக்கட்டுக்குத்தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சூறாவாளி போல சுழன்று வீசிய  பல்வேறு  எழுர்ச்சி போராட்டங்களும், சட்டப் போராட்டங்களால் தடை விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆகவே, ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது  என்ற பிரச்னை தற்போது எழ வாய்ப்பில்லை. இதைத்தவிர, பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படும் வாயில்லா பிராணிகளுக்கு குரல் கொடுப்பதற்காகவாவது,  இது போன்ற சங்கங்கள் புத்துயிரூட்டப்பட வேண்டும் என்பதே விலங்குகள் ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாகும்



Top