logo
புதுக்கோட்டை துணைக்கோள் நகரப் பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்:தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் எஸ்.ஜே.சிரு

புதுக்கோட்டை துணைக்கோள் நகரப் பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்:தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் எஸ்.ஜே.சிரு

23/Jul/2021 09:36:51

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் துணைக்கோள் நகரப் பணிகளை அடுத்த 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளதாக  தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் எஸ்.ஜே.சிரு தெரிவித்தார்.

புதுக்கோட்டை அருகேயுள்ள முள்ளூர் துணைக்கோள் நகரப்பணிகளை  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் ,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபின்னர்  அவர் மேலும் கூறியதாவது:

முள்ளூரில்  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் நடைபெறும் துணைக்கோள் நகரம் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.56.31 கோடி மதிப்பீட்டில் 1,603 வீட்டுமனைகளுடன் அமைக்கப்பட உள்ளது. 

இதில் உயர் வருவாய் பிரிவில் 339 மனைகள் ஒவ்வொன்றும் தலா 2,711 ச.அடி பரப்பளவிலும், மத்திய வருவாய் பிரிவில் 280 மனைகள் தலா 2,325 ச.அடி பரப்பளவிலும், குறைந்த வருவாய் பிரிவில் 218 மனைகள் தலா 1,453 ச.அடி பரப்பளவிலும், பொருளாதாரத்தில் நலிவுற்றப் பிரிவில்; 766 மனைகள் தலா 431 ச.அடி பரப்பளவிலும் என மொத்தம் 1,603 வீட்டு மனைகள் அமைக்கப்பட உள்ளது. 

இந்த துணைக் கோள் நகரத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு, 80 அடி, 60 அடி மற்றும் 40 அடி அகல தார் சாலைகள், ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் இணைப்பு மற்றும் தெருவிளக்கு வசதி, பள்ளி மனை, வணிக மனைகள், பொது உபயோக மனை மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மனைப் பிரிவாக இது அமைக்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமையும். ஆறு மாத காலத்திற்குள் இப்பணிகளை முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தலுக்கிணங்க பழுதடைந்த வீட்டுவசதி வாரிய வீடுகளை சீரமைக்க  தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் 108 திட்டப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது என்றார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்இயக்குநர் எஸ்.ஜே.சிரு.

பின்னர் புதுக்கோட்டை நகராட்சி, கம்பன்நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 15 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டட கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.  ஆய்வின் போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமைப் பொறியாளர் சரவணன், கண்காணிப்பு பொறியாளர் தியாகராஜன், செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் ஜேக்கப், உதவி பொறியாளர் பார்த்திபன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்  கலந்து கொண்டனர். 


Top