logo

ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் 8 மாடிகளுடன் உருவாகிறது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

19/Jul/2021 12:26:21

ஈரோடு, ஜூலை: ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.62 கோடி  செலவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை) கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு தரைத்தளத்துடன், 8 மாடிகள் கெண்டதாக கட்டப்படுகிறது. தரைத்தளத்தின் கட்டுமான பணி முழுமையாக முடிந்து, இறுதி செய்யும் பணி நடைபெறுகிறது. மற்ற தளங்களின் கட்டுமான பணி விரைவாக நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இருந்தாலும், இதயம், நரம்பியல், தலையின் உள் பகுதியில் ஏற்படும் பாதிப்பு, கேன்சர், ரேடியேஷன், உயர் தர ஸ்கேன் போன்ற வசதிகள் இல்லை. அத்துடன் இதுபோன்ற சிகிச்சைக்கான டாக்டர்கள், நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் போன்றோரும் இல்லை.

இதனால், ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும்போது, சேலம் அல்லது கோவை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவர்களை பரிந்துரை செய்கின்றனர்.

அவ்வாறு செய்யப்படுவோர், உரிய சிகிச்சை கிடைக்க மிகவும் தாமதம் ஏற்படுகிறது அல்லது உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில், இக்கட்டுமான பணிகள் நிறைவு செய்து, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட துவங்கியதும், கார்டியாலஜி, நியூரோ, காஸ்ட்ரோ என்டமாலஜி, ரேடியேஷன், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஸ்கேன் கருவிகள் போன்றவை செயல்பாட்டுக்கு வரும். இதனால், சேலம், கோவை போன்ற மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நோயாளிகளை பரிந்துரை செய்யும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படும்.

தவிர, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியை, ஈரோடு அரசு மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அவ்வாறு செயல்படும்போது, கூடுதலாக பல சிகிச்சைகள் கிடைப்பதற்கு வாய்ப்பாகும், என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Top