logo
 ஈரோடு மாவட்டத்தில் 105 இடங்களில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம்: நீண்ட நாள்களுப்பின் முதல் தவணை செலுத்திக்கொண்ட மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் 105 இடங்களில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம்: நீண்ட நாள்களுப்பின் முதல் தவணை செலுத்திக்கொண்ட மக்கள் மகிழ்ச்சி

17/Jul/2021 05:04:18

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் 105 இடங்களில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம்: நீண்ட நாள்களுப்பின் முதல் தவணை செலுத்திக்கொண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் இது வரை 4 லட்சத்து 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் இரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். இன்னும் சிலர் இரவிலேயே வந்து இடம் பிடித்து காத்து நிற்கின்றனர்.

இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வந்தது. நீண்ட நாட்களாக முதல் தவணை தடுப்பூசி போடப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் வந்ததையடுத்து அவை மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ,சுகாதார மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. 

இதையடுத்து இன்று மொடக்குறிச்சி பகுதியில் 8 இடங்களிலும்,  நம்பியூர் 5, சிறுவள்ளூர் 10, சென்னிமலை 7, திங்களூர் 10, புளியம்பட்டி 10, குருவரெட்டியூர் 8, அத்தாணி 6, பவானி 4, சிவகிரி 5, தாளவாடி 3, ஈரோடு மாநகர் பகுதியில் 20 இடங்கள் என மொத்தம் இன்று மாவட்டம் முழுவதும் 105 இடங்களில் 18 ஆயிரத்து 180 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வழக்கம்போல் தடுப்பூசி போடும் மையங்களில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று இடம் பிடித்தனர். 

ஒவ்வொரு மையங்களிலும் முதலில் வந்தவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் 150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகராட்சி பொருத்தவரை 20 மையங்களிலும் முதலில் வந்த 200 பேருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Top