logo
சுதந்திரப்போராட்ட வீரர் பொல்லான் பிறந்தநாள்  அரசு விழாவாக கொண்டாடப்படும்: அமைச்சர் முத்துசாமி தகவல்

சுதந்திரப்போராட்ட வீரர் பொல்லான் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: அமைச்சர் முத்துசாமி தகவல்

17/Jul/2021 04:51:12


ஈரோடு, ஜூலை: சுதந்திரப்போராட்ட வீரர் பொல்லான் பிறந்தநாள்  அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று  வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 216 -ஆவது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில்   நடைபெற்ற நிகழ்வில், சுதந்திரப்போராட்ட வீரர் பொல்லானின் உருவப்படத்துக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் அமைச்சர்கள் முத்துசாமி , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, மாவட்ட  ஆட்சியப்  கிருஷ்ணனுன்னி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

பின்னர், அமைச்சர் முத்துசாமி  செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரர்  பொல்லான் நினைவுநாளை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் இங்கு வந்துள்ளோம்.

ஏற்கெனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மாநாட்டில் மு. க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது  பொல்லான் உருவப் படத்தை திறந்து வைத்து பொல்லானுக்கு உரிய மணிமண்டபம், சரியான சிலை அமைத்துத்தரப்படும் என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் பாதையில்தான் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம். இதனால்தான்  அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியர், மாவட்ட எஸ்பி மற்றும் உயர் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.

தற்போது நடந்த நிகழ்ச்சி அரசு விழாவாக இல்லாமல் இருந்தாலும் கூட வரும் டிசம்பர் 28-ஆம் தேதி  பொல்லான் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். அதற்குள் பொல்லானுக்கு மண்டபம் சிலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருந்தார். இதற்காக இன்று அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். மேலும் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்கள். எனவே முதலமைச்சர் கூறியபடி மணிமண்டபம் சிலை அமைக்க அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம்.இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.

அதனைத் தொடர்ந்து, பாஜக சார்பில்  மொடக்குறிச்சி எம்.எல்.ஏ டாக்டர் சி.கே.சரஸ்வதி, அதிமுக சார்பில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணி முன்னாள் எம்பி., செல்வகுமார சின்னையன், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல், புதூர் கலைமணி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர். 

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ- ஆர்.எம். பழனிச்சாமி தலைமையில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி. ராஜன், மாவட்ட பொது செயலாளர் பாலசுப்ரமணியம், மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பொல்லானின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Top