logo
தூய்மைக்காவலர்களுக்கு அறிவிக்கப்பட்ட  ஊதிய உயர்வை வழங்கக்கோரி அக்.28-இல் வேலை நிறுத்தம்:  உள்ளாட்சித்துறை ஏஐடியுசி பணியாளர் சங்கம் அறிவிப்பு

தூய்மைக்காவலர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்கக்கோரி அக்.28-இல் வேலை நிறுத்தம்: உள்ளாட்சித்துறை ஏஐடியுசி பணியாளர் சங்கம் அறிவிப்பு

03/Oct/2020 12:48:02

ஈரோடு: தூய்மைக்காவலர்களுக்கு சட்டப்பேரவையில் அரசு அறிவித்த மாதம் ரூ.1000-ம் ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வது, ஊதிய உயர்வை வழங்கும் வரை தமிழ்நாடு ஏஐடியுசி தலைவர், மக்களவை உறுப்பினர் கே. சுப்பராயன் தலைமையில் வரும் 28.10.2020-அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் (ஏஐடியுசி)  அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம்,  கோபியில் உள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சு.மோகன்குமார்  தலைமையில் நேற்று (2-10-2020)  நடைபெற்ற மாவட்ட உள்ளாட்சித்துறை ஏஐடியுசி பணியாளர்கள் சங்கத்தின் விரிவுபட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், முடிவுகள் விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில் 1961 பேர் உள்பட தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளில் 66,025 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மைக் காவலர்கள் ஆக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆரம்பத்தில் தேசிய ஊரக வேலை உத்தவாதத் திட்டத்தில் நிர்ணயிக்கப்படும் தினக்கூலி வழங்கப்பட்டு வந்தது. அதாவது, 2014-2015 -ஆம் ஆண்டுக்கு 167 ரூபாயும், 2015-2016 -ஆம் ஆண்டுக்கு 183 ரூபாயும், 2016-2017 -ஆம் ஆண்டுக்கு 203 ரூபாயும், 2017-2018 -ஆம் ஆண்டுக்கு 205 ரூபாயும் தினக்கூலியாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், சட்ட விரோதமாக இவர்களது ஊதியத்தை குறைத்து, 2018 ஏப்ரல் முதல் இவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இது அநியாயமாகும். 

ஆகவே, இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்கள் கடந்த இரண்டாண்டு காலமாக தொடர்ந்து போராடி வருகின்றன. இதன் காரணமாக, தமிழக அரசு கடந்த மார்ச் 16 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 2020 ஏப்ரல் முதல் மாதம் 2600/- ரூபாயிலிருந்து 3600/- ரூபாயாக அதாவது 1000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால், 6 மாதங்களுக்கு மேலாகியும், அதற்கான அரசாணை (G.O) பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே, அரசாணை பிறப்பிக்கக்கோரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு  தொடர்ந்து முறையிட்டும் நாளதுவரை அரசாணை பிறப்பிக்காமல் காலந்தாழ்த்தி வருகின்றனர். தமிழக அரசின் தொழிலாளர் விரோத அலட்சியப் போக்கை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஊதிய உயர்வை வழங்கிட அரசாணை பிறப்பிக்க வேண்டும். மேலும், கொரோனா காலத்தில் உயிரைப்பணயம் வைத்துப் பணியாற்றிவரும் தூய்மைக் காவலர்களுக்கும்  இரட்டிப்பு சம்பளத்தை சிறப்பு ஊதியமாக வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பின்வரும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அக்டோபர் 28-இல் வேலை நிறுத்தம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்: அரசு அறிவித்த ரூ.1000 -ம் ஊதிய உயர்வை உடனடியாக வழங்கக்கோரி வரும் 28-10-2020-இல்   (புதன்கிழமை) மாவட்டம் முழுவதும் தூய்மைக் காவலர்கள் வேலை நிறுத்தம்  செய்வது, ஊதிய உயர்வு வழங்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது.தூய்மைக் காவலர்களின்  காத்திருப்புப் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆதரவைக் கோருவதெனவும் முடிவு செய்யப்பட்டது

அக்டோபர் 12, 19, 26 ஆகிய தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்து வேலை செய்வது. 6-10-2020 முதல் 25-10-2020 வரை 20 நாட்கள் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் முன்பும் போராட்ட விளக்கக் கூட்டங்கள் நடத்துவதுஎன்றும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்  வி.பி.குணசேகரன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, மாவட்டப் பொதுச் செயலாளர்  ஜி.வெங்கடாசலம், மாவட்டச் செயலாளர் பி.எல்.சிவராமன், சங்கச் செயலாளர் ஆர்.மணியன், சங்க வட்டார பொறுப்பாளர்கள் எம்.மோகன் (தாளவாடி), எம்.சுரேந்திர் (சத்தி), கே.சக்திவேல் (பவானி சாகர்), அ.கு.பரமேஸ்வரன், க.சி.கனகராஜ், கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (கோபி), கே.சின்னசாமி (நம்பியூர்), எஸ்.தேவராஜன் (அந்தியூர்), எஸ்.கந்தசாமி, பி.வி.பாலதண்டாயுதம், கே.பி.நடராஜன் (பவானி), எம்.பாபு (பெருந்துறை), பி.ரவி (ஈரோடு)  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Top