logo
வரலாற்றுச் சின்னமாகத் திகழும் புதுக்கோட்டை நீதிமன்ற கட்டிடங்கள் பழமை மாறாமல் பாதுகாக்கப்படுமா?

வரலாற்றுச் சின்னமாகத் திகழும் புதுக்கோட்டை நீதிமன்ற கட்டிடங்கள் பழமை மாறாமல் பாதுகாக்கப்படுமா?

06/Jul/2021 12:08:08

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டையில் பழைய பேருந்து  நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்  உள்ள மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடங்களை பழமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென தொல்லியல் ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்   எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களைவிட புதுக்கோட்டை மாவட்டம் தமிழக வரலாற்றில் அரிய பெரும் பொருள் காட்சிக் கூடமாகத் திகழ்கிறது. இம்மாவட்டத்துக்கென பல தனிச்சிறப்புகளும் உண்டு. அதிக எண்ணிக்கையில் குகைக் கோயில்களும், ஆயிரத்துக்கு மேல்பட்ட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்.

மிக அதிக எண்ணிக்கையில் ரோமாபுரி தங்க நாணயங்கள், தொல்லியல் பழமைச் சின்னங்கள், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கோயில்கள், சரித்திர தொடக்க காலத்தில் வழக்கில் இருந்த பிராமிக் கல்வெட்டுகள், பழந்தமிழ் கல்வெட்டுக்களும், தமிழ் எழுத்து வளர்ச்சி வரலாற்றை அறியும் கல்வெட்டுக்கள் நிறைந்த மாவட்டம் இப்படி பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் சிறப்பைப் பெற்றதுடன் அண்மைக்காலம் வரை சுமார் 300 ஆணடுகள் தனியரசாக (சமஸ்தானம்) திகழ்ந்த பெருமைக்குரிய ஒரே மாவட்டம் புதுக்கோட்டை.

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜாவிஜயரெகுநாதத்தொண்டைமான் ஆட்சி காலத்தில்  1812 -இல்  சமஸ்தானத்தின் நீதி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆங்கிலேய ஆட்சிப்பகுதியில் நடைமுறையில் இருந்த சட்டங்களும் நடைமுறைகளும் வழக்கிலிருந்தன.

இதன் பிறகு 1890 -களில் புதுக்கோட்டையில்   உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்துடன் கூடிய தலைமை நீதிமன்றம்  செயல்பட்டது. இதுவே சமஸ்தானத்தின் உரிமையியல், குற்றவியல் மேல் முறையீட்டு உயர்நீதி மன்றமாக திகழ்ந்தது. இதில் மூன்று நீதிபதிகள் பணிபுரிந்தனர். இங்கு நடைபெறும் வழக்குகளில் மேல் முறையீடு செய்ய லண்டனில் உள்ள நீதிமன்றத்துக்குத்தான் செல்ல முடியும். 

சமஸ்தானத்தில் ஆலங்குடி, அன்னவாசல், கீழாநிலைக்கோட்டை, குளத்தூர், பெருங்களூர், பொன்னமராவதி, திருமயம், விராலிமலை ஆகிய இடங்களில் சிறு வழக்கு உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்பட்டன.

நாடு விடுதலை அடைந்து ஓராண்டுக்குப்பின் 1948 -இல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய குடியரசுடன் இணைக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்த புதுக்கோட்டை கடந்த 1974 -இல் தமிழகத்தின் 15 -ஆவது மாவட்டமாக புதுக்கோட்டை உருவானது.  

புதுக்கோட்டை மாவட்டம் உருவாகாத நிலையில், இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலகங்கள், அறநிலையத் துறை தனி அலுவலர் அலுவலகங்கள் அமைந்திருந்தன.

ஆனால், தனி மாவட்டமான பிறகு இந்த அலுவலகங்களை வேறு இடத்துக்கு மாற்றி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக உருவாக்க வேண்டும் என வழக்குரைஞர்களும், நீதிபதிகளும்  எடுத்த  பல்வேறு முயற்சிகளின் காரணமாக  வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், அறநிலையத்துறை  ஆகிய அலுவலங்கள் இந்த வளாகத்திலிருந்து வெளியேறி புதிய கட்டிடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன.

வளாகத்துக்கு வெளியே இயங்கி வரும் மகளிர் நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றம் ஆகியவை  இந்த வளாகத்தில் அமைந்துவிட்டால் பிற மாவட்டங்களை போல ஒருங்கிணைந்த  நீதிமன்ற வளாகமாக மாறும் காலம் விரைவில் சாத்தியமாகிவிடும்.

ஏறத்தாழ 130 ஆண்டுகளை கடந்து நிற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த  நீதிமன்ற வளாகம் குறித்து நாம்  பெருமிதம் கொள்ளும்  வேளையில் தற்பொழுது  இந்த நீதிமன்ற வளாகத்தையும், அதிலுள்ள கட்டிடங்களின் நிலைமையைப் பார்க்கும்போது  அந்த வரலாற்று பெருமை காப்பாற்றப்படுமா என்ற கேள்வி முன்னெழுகின்றது.



புதுக்கோட்டையின் அடையாளங்களில் ஒன்று செந்நிற பொது அலுவலகக் கட்டிடம். 1890 -களில்  திவானாக இருந்த  புதுக்கோட்டையின் சிற்பி என்ற பெருமைக்குரிய   சேஷைய்யா சாஸ்திரி, நகரில் இருந்த அனைத்து அலுவலகங்களையும் ஓரிடத்தில் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் இதைக் கட்டினார். ஏறத்தாழ  130 ஆண்டுகளைக் கடந்தும் பொலிவோடு இன்றும் காட்சி தந்து கொண்டிருக்கிறது.

தற்போது இதில் மாவட்ட நீதிமன்றம், கோட்டாட்சியர் அலுவலகம், அரசு அச்சகம் , மாவட்ட கருவூலம், தர்பார் ஆவண காப்பகம் என்று பல வேறு அலுவலகங்கள் இதில் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகக்கூடிய இடமாகும். இந்த அலுவலகத்திற்குள் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக  கிடக்கிறது.


புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஆள் அரவமற்றுக் கிடக்கும் இடங்களில் எல்லாம் நல்ல சாலைகள் போடப்பட் டிருக்கிறது;  தற்போது போட்டுக் கொண்டுமிருக்கிறார்கள். நகரின் மையப்பகுதியில் முக்கியமான அலுவலகங்கள், உயர்அதிகாரிகள்  இருக்கும் வளாகம் கவனிப்பாரற்று கிடப்பதன் காரணம் தெரியவில்லை. லேசான  மழை பெய்தாலே போதும் கோட்டாச்சியர், மாவட்ட கருவூல அலுவலக வாசல்  பகுதி குளமாக மாறிவிடும்.

மேலும் புராதன இந்தக் கட்டிடத்தின் மேல்புறம், பக்கவாட்டு சுவர்களில்  ஆலமரங்களும் அரச மரங்களும் கட்டிடங்களை அழிப்பதற்காக செழித்து வளர்ந்தோங்கி வருகின்றன.  மாவட்டத்திற்கு தற்போது  வந்திருக்கும்  புதிய ஆட்சியர் புராதன கலைகளில் ஆர்வம் உள்ளவர் என்பது  அனைவருக்கும் தெரிந்ததே. எனவே  இந்த புராதன சின்னத்தை பழமை மாறாமல் புதுப்பித்து பாதுகாக்க   அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.


Top