logo
கவுந்தப்பாடி அருகே உள்ள மகாத்மா காந்தி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

கவுந்தப்பாடி அருகே உள்ள மகாத்மா காந்தி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

02/Oct/2020 06:18:09

ஈரோடு, மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி செந்தாம்பாளையத்தில் அமைந்துள்ள மகாத்மாகாந்தி கோயிலில் 152-ஆவது பிறந்த நாளையொட்டி மகாத்மா காந்தி  உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.  இதில்,தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

 கவுந்தப்பாடி செந்தாம்பாளையத்தில் வையாபுரி என்பவர் மகாத்மா காந்தியின் மீது கொண்ட பற்றினால் 1997 -ஆம் ஆண்டு மகாத்மா காந்திக்கும் அன்னை கஸ்தூரி அம்மையாருக்கும் தனித்தனி சந்நிதி அமைத்து கோயிலை கட்டினார். அக்கோயிலில் கையில் தடியுடன், கண்ணாடி அணிந்தபடி, ஐந்து அடியில் காந்தி சிலையும், அதன் எதிரே அன்னை கஸ்தூரிபா சிலையும் உள்ளது. 

இக்கோயிலில் ஆண்டுதோறும், ஜன., 26 (குடியரசு தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்., 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய மூன்று முக்கிய நாளில், காந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். பிற நாளில் மூன்று வேளையும் பூஜை நடைபெறுகிறது. அதன்படி, காந்தியின் பிறந்த நாளான  அக்டோபர் 2 ஆம்  தேதியில் அவரது 152-ஆவது பிறந்த நாளையொட்டி மகாத்மா காந்தி சிலைக்கும் மற்றும் கஸ்தூரிபா அம்மையாரின் சிலைக்கும்  சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 

இதையொட்டி, பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், நெல்லிப்பொடி, பன்னீர், இளநீர் மற்றும் புனித நீர் ஊற்றி, மந்திரம் முழங்க அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து காந்தி சிலைக்கு கதர் ஆடை, கண் கண்ணாடி அணிவித்து, விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

இவ்விழாவில் பங்கேற்ற த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் சிறப்பு பூஜையில் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இக்கோயிலை கட்டிய வையாபுரி முதலியார் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானதையடுத்து அவரது மகன் தங்கராஜ் தற்போது கோயிலை நிர்வகித்து வருகிறார்.

இக்கோயிலை அரசு எடுத்து நடத்தவேண்டும் என்றும் காந்தி ஜெயந்தி சுதந்திரதினவிழா மற்றும் குடியரசு தின விழாக்களை அரசு விழாவாக அரசு எடுத்து நடத்தவேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 


Top