logo
புதுக்கோட்டை அருகே தடையை மீறி மக்கள் சபைக்கூட்டம்: காவல்துறையினர் விசாரணை

புதுக்கோட்டை அருகே தடையை மீறி மக்கள் சபைக்கூட்டம்: காவல்துறையினர் விசாரணை

02/Oct/2020 04:57:58

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், கோட்டையூர் ஊராட்சியில் இன்று(அக்.2) நடத்தப்பட்ட மக்கள் சபைக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தடையை மீறி நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது இந்நிலையில்,  கிராமசபை கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தாக்கத்தை காரணம் காட்டி நேற்று இரவு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டையூர் ஊராட்சியில்  மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு, பஞ்சாயத்து தலைவர் ராமதிலகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜி. மங்களராமன் முன்னிலை வகித்தார். இதில், திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ- எஸ்.ரகுபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக முதல் தீர்மானமும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீரை கிராமம் தோறும்  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 அரசு தடை விதித்திருந்ததையும் மீறி மக்கள் சபை கூட்டம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போலீஸார் ஊராட்சித்தலைவர் உள்ளிட்ட நிர்வாரிகளிடம் விசாரணை மேர்கொண்டனர். இதில், கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Top