logo

ஈரோடு மாவட்டத்தில் 2 -ஆவது நாளாக பரவலாக மழை-கோபியில் 44 மி.மீ பதிவு

02/Oct/2020 12:18:56

ஈரோடு மாவட்டத்தில்  இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்தது.குறிப்பாக கோபியில் அதிகபட்சமாக 81 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல் கொடிவேரி, வரட்டுப்பள்ளம் குண்டேரி பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சத்தியமங்கலம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக  புதன்கிழமை  ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக கோபியில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 44 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதுபோல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. வரட்டுப்பள்ளம், குண்டேரிப்பள்ளம் பகுதிகளிலும் நேற்று சாரல் மழை பெய்தது.

சென்னிமலை சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இங்கு உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது.ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் உள்ள தோப்புபாளையம் கிராமத்தில் மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இந்த மழையால் நிரம்பி வழிந்தது .மேலும், இந்த மழையால் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் தேங்கி நின்றது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: கோபி -44, வரட்டுப்பள்ளம்- 15.8, கவுந்தப்பாடி -12.6, எலந்தகுட்டை மேடு- 11.2, குண்டேரிபள்ளம் - 6.2.

பவானிசாகர் அணை-பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை  இல்லாததால் அனைத்து வரும் நீர்வரத்து குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 101.71 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1057  கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும்,  பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 


Top