logo

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்களுக்கு புதிய மருத்துவக்காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்க கோரிக்கை

26/May/2021 02:11:41

புதுக்கோட்டை, மே:  கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  வலியுறுத்தி யுள்ளது..

இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர்  .மயில்,  தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கொரோனா பெருந்தொற்றால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்இந்நிலையில் தமிழக அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை பெற அரசாணை (எண்: 251 -மக்கள் நல்வாழ்வுத்துறை- நாள்: 22.05.2021) வெளியிட்டுள்ளது வரவேற்புக்குரியது.

கடந்த ஆண்டில ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (NHIS)  கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற அரசாணை( எண்: 280 -நிதித்துறை- நாள்: 24.06.2020)  தமிழக அரசு வெளியிட்டது. அதில் கொரோனா நோய்க்கு கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்தப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப் படும் கட்டணத்தை விட மிகக் குறைந்த தொகையே அனுமதிக்கப்பட்டது.

மேலும், தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கொரோனா சிகிச்சைக்கு வழங்கும் தொகையை விட மிகக் குறைவான தொகையே கடந்த ஆண்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கு தொகை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உதாரணமாக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சையில் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 35,000  அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.8,500  மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

னவே, கொரோனா சிகிச்சையில் கட்டணமில்லா சிகிச்சையை வழங்கிட வேண்டும். தற்போது புதிதாகக் கண்டறியப் பட்டுள்ள கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை  கட்டணம் வசூலிப்பதாகத் தெரிகிறது. எனவே, கருப்பு  பூஞ்சை நோய்க்கான சிகிச்சையையும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவந்து கட்டணமில்லா சிகிச்சைக்கு வழிவகை செய்திட வேண்டும் .

Top