logo
முன்களப்பணியாளர்கள் அரசாணையில் அச்சு ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவரையும் சேர்க்க வேண்டும்: பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

முன்களப்பணியாளர்கள் அரசாணையில் அச்சு ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவரையும் சேர்க்க வேண்டும்: பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

24/May/2021 01:35:24

கொரோனா தொற்றிலிருந்து பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் வகையில், பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களும், அரசும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் அமைப்புகள் ஓன்றிணைந்து, காணொளி வாயிலாக நடத்திய கோரிக்கை வலியுறுத்தல் கூட்டத்தில் (23.5.2021) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

                        நிறுவனங்களிடம் முன்வைக்கும் கோரிக்கைகள்:

1) கொரோனா பெருந்தொற்றிலிருந்து பத்திரிகையாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான      உபகரணங்கள் அனைத்தையும் உடனே வழங்க வேண்டும்.

2) பத்திரிகையாளர்களின் பணி நேரத்தை குறைத்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

3)    பத்திரிகையாளர்களை சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.

4)   பத்திரிகையாளர்கள் தங்களை தனிமைப் படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக, தங்குமிடம் வழங்கும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

5) த்திரிகையாளர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், எந்தவித கேள்வியுமின்றி, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கி, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்கான ஏற்பாட்டை செய்வதுடன், அவர்களது மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

6)   எந்த ஒரு சமயத்திலும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள ஆபத்தான இடங்களுக்கு பத்திரிகையாளர்களை அனுப்பவே கூடாது.

7)   இதுவரை, பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், மருத்துவக் காப்பீடு வழங்காத நிறுவனங்கள், இனியும் தாமதிக்காமல் உடனே வழங்க வேண்டும்

8) மாவட்டங்களில், தாலுகா அளவில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு, அனைத்து நிறுவனங்களிலும் அவர்கள் அனுப்பும் செய்திக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று முடியும்வரை, அவர்கள் அனைவருக்கும் நியாயமான ஒரு தொகையை, நிலையான சம்பளமாக வழங்க வேண்டும்.


                                 அரசுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள்:

1) பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் அனைத்தையும் காணொலி வாயிலாக நடத்த வேண்டும்.

2) கொரோனா சிகிச்சை மையங்களில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர்களும், அதிகாரிகளும், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்காமல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

3)  பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பு மருந்து அளிக்கும் சிறப்பு முகாமை உடனடியாக தொடங்க வேண்டும்.

4) கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.

5) ஏற்கெனவே கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு, முன்களப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் 25 லட்சம் ரூபாய் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

6) பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ள தமிழக அரசு, அதற்கான அரசாணையை வெளியிடும்போதும், ஊடக நிறுவனங்களின் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் தொடங்கி, செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஓட்டுநர்கள், மாவட்ட செய்தியாளர்கள், தாலுகா செய்தியாளர்கள் என அனைவரையும் முன்களப் பணியாளர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த காணொளி கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

 

Top