logo
விவசாயிகளின் நிலத்தை பறிக்கும் சட்டங்கள்:  தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

விவசாயிகளின் நிலத்தை பறிக்கும் சட்டங்கள்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

29/Sep/2020 09:25:51

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இரண்டு நாட்கள் மட்டுமே நடந்த தமிழ்நாடு சட்டடப்பேரவைக் கூட்டத்தில் 16.9.2020 -இல் அவசர கதியில் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன . இதில் தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில திருத்தங்கள் மிகவும் ஆபத்தானவையாகவும், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாகவும் அமைந்துள்ளன

சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் இந்த சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டுமென வற்புறுத்திய போதும், அதிமுக அரசு செவிமடுக்கவில்லை. தொடர்ந்து அதிமுக அரசு தானடித்த மூப்பாக நிலம் தொடர்பாக நிறைவேற்றியுள்ள சட்டங்கள் நீதிமன்றங்களிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சட்டங்களை நிறைவேற்றுவது மோசமான விளைவுகளை உண்டாக்கும்

சட்டப்பேரவைக் கூட்டத்தில்  நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் ஏற்புடையதல்ல என்பதையும், இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என வலுவான குரல் எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

நகர் ஊரமைப்புச் சட்டப் பிரிவு 20: ஏற்கெனவே உள்ள நகர் ஊரமைப்புச் சட்டத்தின் பிரிவு (20)-இல் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது அவ்வளர்ச்சி திட்டத்தின் உள்ளடங்கிய பகுதிகளில் உள்ள அனைத்து நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் உரிமைவிவரங்களை தெரிவிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின்படி இந்த விதி நீக்கப்பட்டுள்ளது. அதாவது, வளர்ச்சித் திட்டங்களுக்கான முன்மொழிவை அனுப்பும் போது அதில் உள்ளடங்கியுள்ள நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் உரிமை விபரங்களை குறிப்பிடாமலேயே முன்மொழிவுகளை அனுப்பிடலாம் என்பதாகும். இதனால், ஒரு வளர்ச்சித் திட்டம் நிறைவேற்றப்படும் போது எந்தெந்த நிலம்,யாருடைய நிலம் அல்லது வீடுகள் அதில் உள்ளடக்கப்படும் என்கிற விபரங்களை மறைத்துவிட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்புவதாகும்

பிரிவு 21: இரண்டாவது திருத்தமாக, பிரிவு (21)-இல், இடம் பெற்றுள்ள சம்பந்தப்பட்ட நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் உரிமையாளர்களுடன் கலாந்தாலோசித்த பின்பு என்ற வாக்கியங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலங்களை, கட்டிடங்களை கையகப்படுத்துவதற்குமுன்னால் சம்பந்தப்பட்ட நிலம் அல்லது கட்டிட உரிமையாளர்களிடம் கலந்து பேசிய பின்பு கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பது நீக்கப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட நில உடைமையாளர்களிடம் கலந்து பேசாமலேயே தன்னிச்சையாக  நிலங்கள், கட்டிடங்களை கையகப்படுத்திக் கொள்ள இந்த திருத்தம் வழிவகை செய்துள்ளது

இதனால் நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் நிராதரவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.உதாரணமாக, எட்டு வழிச் சாலை அல்லது இதுபோன்ற வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இனிமேல் எந்தெந்த நிலம் உட்படுத்தப்படப்போகிறது என்பதும் வெளிப்படையாக அறிவிக்கப்பட மாட்டாது

நிலம் கையகப்படுத்தும் போதும்சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் கலந்து பேசாமலேயே கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதிமுக அரசு இத்தகைய அராஜகங்களை இப்போது மட்டுமல்ல; நிலம் கையகப்படுத்தல் சட்டம் என்ற பெயரில் இதற்கு முன்பும் நடத்தியிருக்கிறது

2013 - நிலம் கையகப்படுத்தும் சட்டம்: அரசின் தேவைக்காகவும், தனியார் தொழிற்சாலைகளின் தேவைக்காகவும் நாட்டில் நீண்ட நெடுங்காலமாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட 1894-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் இதேபோல, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கலந்து பேசாமல் நிலம் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்ற விதியின் அடிப்படையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளது நிலங்கள் பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களுக்கு உரிய நஷ்டஈடும் வழங்கப்படாமலும் பல ஆண்டுகள் அலைக்கழிக்கப்பட்டனர்

இந்த கொடுமைகளை எதிர்த்து நாடு முழுவதும்நடந்த போராட்டத்தின் விளைவாகவே 2013-ஆம் ஆண்டு புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி, நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கலந்து பேசி ஒப்புதல் பெற வேண்டுமென்பதும், உரிய நட்ட ஈடு வழங்க வேண்டுமென்ற அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டன. ஆனால் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு விரோதமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக அரசு சட்டம் இயற்றியது

அதிமுக அரசின் அராஜகம்: மத்திய அரசால் நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் 21.2.2014 அன்று தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான ஒரு அரசாணையை தமிழக அதிமுக அரசு வெளியிட்டது. அந்தஅரசாணையை அடிப்படையாகக் கொண்டு 22.2.2014 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற முனைந்தது. மத்திய அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் பல நல்ல அம்சங்களை கொண்டிருந்த போதிலும் இச்சட்டத்திலும் விவசாயிகளை பாதிக்கும் சில குறைகள் இருந்தது

குறிப்பாக, இச்சட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 4-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 13 சட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. உதாரணமாக, தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தினால் (2013) புதிய சட்ட விதிகள் அதை கட்டுப்படுத்தாது. இதற்கென 105-ஆம் பிரிவு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்று 13 சட்டங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கும் 105-ஆவது பிரிவினை நீக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வற்புறுத்திய போதும் அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்க மறுத்து விட்டது

மறுபுறம், அதிமுக அரசு, மத்திய சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கும் 105வது பிரிவோடு  105 -என்ற பிரிவை சேர்ப்பதற்கான திருத்தத்தை முன்மொழிந்திருந்தது. மத்திய சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்ட 13 சட்டங்களின் பட்டியலோடு () தமிழ்நாடு தொழிற்சாலைகள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் ()நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம், ()ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை (1997) சேர்த்து விட்டது அதிமுக அரசு.அதாவது இம்மூன்று சட்டங்களை பயன்படுத்தி நிலத்தை கையகப்படுத்தினால் 2013-ஆம் ஆண்டு சட்டத்தின் ஷரத்துகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதாகும்

இத்திருத்தச் சட்ட மசோதா சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்இச்சட்டத் திருத்தங்களை குறிப்பாக, தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம், நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றினால் மத்திய அரசின் சட்டத்தால் கிடைக்கும் பலன்கள் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காது; மேலும் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டமே தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாத நிலை உருவாகி விடும்

மத்திய அரசின் சட்டத்திற்குவிரோதமான ஷரத்துக்களை அதே சட்டத்தில் உள்நுழைப்பது சட்டத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி விடும்என எழுப்பினோம். தெரிவிக்கப்பட்ட கடுமையான எதிர்ப்புகளையும் மீறி சட்டம் நிறைவேற்றப்பட்டது. எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட போது, சட்டங்களின் சில அம்சங்களை திருத்த வேண்டுமென குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து ஒப்புதல் வழங்க மறுத்து திருப்பி அனுப்பப்பட்டது

இதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத்தில் நமது எதிர்ப்பையும் மீறி 20.2.2014 அன்று நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் திருத்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. அதற்கு பதிலாக வேறு இரண்டு திருத்தச் சட்டங்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்தார்

முதல் திருத்தச் சட்டம் என்னவென்றால், 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சாலைகள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தினால் 2013ம் ஆண்டின் சட்டப்படி நஷ்டஈடு வழங்குவதற்கு மட்டும் வழிசெய்வதற்கான திருத்த சட்டமாகும். அதாவது நஷ்ட ஈடு என்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் 2013 சட்டவி திகள் இதற்கு பொருந்தாது என்பதாகும். இதைப்போன்று மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் தமிழக விவசாயிகளுக்கு பொருந்தாத வகையில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருந்தன

இந்த திருத்தங்களையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தோம். ஆனால் அதையும் மீறி சட்டம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரால் 1.1.2015 அன்று இச்சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது

உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு: இந்த சட்டத்திருத்தங்களின் படி பலருடைய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 3.7.2019 அன்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் தமிழக அரசு மேற்கொண்ட மூன்று சட்டத்திருத்தங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது

ஏற்கெனவே 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசு ஒரு சட்டம் நிறைவேற்றிய பின்னர், அதற்கு முன்னதாக மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லாததாகி விடும் என்பதோடு, அந்த மத்தியஅரசின் சட்டத்தில் உள்ள விதிகளை அதற்கு எதிரான மாநிலசட்டத்தில் சேர்ப்பது சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், மத்திய சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிய செப்டம்பர் மாதம் 27, 2013-க்குப் பின்னர் பழைய சட்டங்களின் மூலம் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது

அதேசமயம், நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து அந்நிலங்களில் அரசின் திட்டங்கள் முடிவடைந்த நிகழ்வுகளில் அந்த நிலங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி அளிப்பது சாத்தியமானதல்ல என்பதால் அவர்களுக்கு முழுமையான சட்டப்படியான நஷ்ட ஈடு மற்றும் மறுவாழ்வு சலுகைகளை வழங்கிட வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

இத்தீர்ப்பை தமிழக  அரசு ஏற்காததால் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில்  ரூ. 80 ஆயிரம்கோடி பெருமான திட்டப்பணிகள் திரிசங்கு சொர்க்கத்தில் விடப்பட்டன. இத்தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுவழக்கு தற்போது நிலுவையில் உள்ளது

மேலும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேற்கண்ட வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள், ஏற்கனவே இதுதொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்து விட்டார்கள்

மீண்டும் அதே சட்டங்கள்: இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நேரத்தில், மீண்டும் 2019ம் ஆண்டு, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட அதே அம்சங்களை சட்டமாக நிறைவேற்றியுள்ளது. சட்டத்தின் காலவரம்பு தேதியில் மட்டும் சில மாற்றங்களை செய்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக இவ்வாறு சட்டங்களை மீண்டும் நிறைவேற்றுவது சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்பது தெளிவாக தெரிந்த பின்னரும் மீண்டும் அதிமுக அரசு அதே சட்டங்களை நிறைவேற்றியுள்ளது வினோதமானதாகும்

அரசின் தேவைக்கு நிலங்களை கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி முறைப்படி நடவடிக்கைகள்மேற்கொண்டு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றி கையகப்படுத்த முடியும். ஆனால் அதிமுக அரசு நில உரிமையாளர்கள், விவசாயிகள் இவர்கள் மீது கிஞ்சிற்றும் அக்கறையில்லாமல் இவர்களது நலன்களுக்கு விரோதமாக மீண்டும், மீண்டும் சட்டங்களை நிறைவேற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்

இதே அடிப்படையில் தான் கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் செப்.1- ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ள நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களின் உரிமைகளுக்கு விரோதமானதாகும்.எனவே தொடர்ந்து, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு தானடித்த மூப்பாக விவசாயிகள் மற்றும் நில உடமையாளர்களின் நிலங்களை பறிக்கும் வகையில் அதிமுகஅரசு நிறைவேற்றி வரும் சட்டங்களை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்ப வேண்டியது அவசியமானதாகும்

அதுமட்டுமல்ல, இன்றைக்கு விவசாயிகளின் வேளாண் நிலங்களையெல்லாம் பறிக்கக்கூடிய, விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கக்கூடிய கொடியசட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை படுகொலை செய்து நிறைவேற்றியிருக்கிறது. அந்த சட்டங்களுக்கு தமிழக அதிமுக அரசு ஆதரவு தெரிவிக்கிறது. தமிழகத்தில் நில உச்சவரம்புச் சட்டத்தை முழுமையாக அமலாக்கவில்லை

அதை அமலாக்க அதிமுகஅரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது. அதைப்பற்றி அதிமுக அரசுக்கு கவலையில்லை. வீட்டுமனைப்பட்டா கோரி லட்சக்கணக்கான மக்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்

அவர்களை பற்றி இந்த அரசுக்கு துளியும் கவலையில்லை. அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காத, கவலைகொள்ளாத தமிழக அரசு, எந்த வகையிலேனும் விவசாயிகளிடமிருந்து நிலங்களை கைப்பற்றுவது, கையகப்படுத்துவது, பறிப்பது என்பதில் குறியாக இருக்கிறது.எனவே இது முற்றிலும் ஒரு விவசாய விரோத அரசு என்பதை அம்பலப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்..

 

Top