07/May/2021 08:25:17
சென்னை, மே: கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகவேகமாகப் பரவிவரும் கொடுஞ்சூழலில் வட மாநிலங்களில் நிகழ்வதுபோல, தமிழகத்திலும் உயிர்க்காற்றான ஆக்சிஜன் தட்டுப் பாட்டால் நோயாளிகள் உயிரிழந்து வரும் செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன்.
சில நாள்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகளும், நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகளும் உயிர்க்காற்றின்றி மரணித்த செய்தியானது பெரும் அச்சத்தையும், கவலையையும் தருகிறது.
வடஇந்திய மாநிலங்களின் மருத்துவமனைகளில் போதிய இடமின்றியும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்றியும் வீதிகளிலும், வாகனங்களிலும் மக்கள் துடிதுடித்து இறப்பதையும், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கையில் உயிர்க்காற்று உருளைகளைத் தூக்கிக்கொண்டு கண்களில் கண்ணீரோடு அலைவதையும்.
இறந்தவர் களின் உடல்களைச் சுமக்க ஆளில்லாமல் குடும்பத்தினரே சுமக்கும் அவலநிலை யையும், இடைவிடாது இறந்தவர் களின் உடல்கள் எரியூட்டப்படுவதையுமென எல்லாவற்றை யும் கண்டப்பிறகும்கூட தமிழக அரசு, அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள் ளாது அலட்சிய மாகச் செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய தமிழக அரசு, அதனைச் செய்யாது கவனக்குறைவாக இருந்ததே இத்தனை உயிரிழப்புகள் ஏற்படக் காரணமாக அமைந்தி ருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வெளியே ஆக்சிஜன் பற்றாக்குறையை உடன டியாகச் சரிசெய்ய வேண்டும் என மக்களும் மருத்துவர்களும் வீதியில் இறங்கிப் போராடும் காட்சிகள் மிகவும் மனவேதனையை அளிக்கின்றன. ஆளும் அரசுகளும் , அதிகாரத்திலிருக் கும் கட்சிகளும் மாறலாம். ஆனால், அரசு இயந்திரம் நிலையானது. அதுவும் இப்பெருந்தொற் றுக் காலத்தில் இடைவிடாது இயங்கி மக்களைக் காக்க வேண்டியது அரசுத்துறைகளின் பெரும் பொறுப்பும், அவசியக்கடமையுமாகும்.
இனியும் இதுபோல அரசின் அலட்சியத்தால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே, பேரிடர் சூழலை மனதில்கொண்டு உயிர்க்காற்றுடன்கூடிய படுக்கை வசதியை நோய்த்தொற்றுக் குள் ளான நோயாளிகளுக்கு உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தலையாயக்கடமையாகும்.
ஆகவே, தமிழக அரசு கண்ணுக்கு முன் நிகழும் பேராபத்தினை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல் பட்டு, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் கொரோனோ தொற்று நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்ற மருந்துகள், படுக்கைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.
தமிழகத்தில் இனி ஒரே ஒரு உயிர்கூடப் போதிய மருத்துவ வசதிப் பற்றாக் குறையால் பறிபோகா வண்ணம் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை சீமான் வலியுறுத்தியுள்ளார்.