logo
ஆலங்குடி அருகே மொய் விருந்து வைத்து கொரோனா நிவாரண நிதி திரட்டிய தேநீர் கடைக்காரர்.

ஆலங்குடி அருகே மொய் விருந்து வைத்து கொரோனா நிவாரண நிதி திரட்டிய தேநீர் கடைக்காரர்.

05/May/2021 08:11:02

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மொய் விருந்து வைத்து   கொரோனா நிவாரண நிதி திரட்டிய தேநீர் கடைக்காரரின் முயற்சியை பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.

 ஆலங்குடி அருகேயுள்ள மாங்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(43). இவர், வம்பன் 4 சாலையில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இவர், கஜா புயல் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து போது, தனது, தேநீர் கடையில் வாடிக்கையாளர்களின் கடன் தொகையை முழுவதையும் தள்ளுபடி செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து, கொரோனா பொதுமுடக்க காலத்திலும், தனது கடைக்கு கைக்குழந்தையோடு வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பால் வழங்கி வந்தார்.

இந்நிலையில்,கரோனா தொற்றை எதிர்கொள்ள முடியாமல் புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் பெரும் துயரடைந்து வருகின்றனர். அவர்களுக்கு, சிவக்குமார் உதவ முடிவு செய்துள்ளார். ஆனால், தேநீர் கடை நடத்தி வரும் இவரால் பணத்தை சேர்க்க இயலவில்லை. அதனால், இவர், ஆலங்குடி பகுதியில் ஆடி மாதங்களில் நடைபெறும் மொய் விருந்து விழாக்களைப் போன்று விழா நடத்தி நிவாரண நிதி சேகரிக்க முடவு செய்து, புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தனது தேநீர் கடையில் மொய் விருந்து நடத்தி கரோனா நிவாரண நிதி வசூல் செய்வதாக அழைப்பிதழ்களை அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களும் புதன்கிழமை அவரது கடையில் தேநீர் அருந்திவிட்டு அங்கு வைக்கப்பட்ட மொய் சட்டியில் பணத்தை போட்டுவிட்டு சென்றனர்.

 இதுகுறித்து சிவக்குமார் கூறியது: தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த முடியாமல் ஏராளமானோர் இறந்து வருவதாகவும், ஆக்ஸிஜன் கிடைக்காமல் பலர் அவதியடைந்து வருவதாகவும் நாளிதழ் செய்திகள் மூலம் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால், தேநீர் கடை நடத்திவரும் நான் எனது குடும்பத்தேவையை பூர்த்தி செய்யவே கஷ்டப்பட்டு வருகின்றேன். அதனால், மொய் விருந்து மூலம் நிதி திரட்டி நிவாரண நிதியாக வழங்க திட்டமிட்டேன். அதன்படி புதன்கிழமை நடத்திய மொய்விருந்தில் பொதுமக்கள்  ரூ.14429 மொய் செய்துள்ளனர். இந்த தொகையை ஆட்சியரிடம் கொரோனா நிதியாக வழங்க உள்ளேன் என்றார்.

 

Top