logo
அக் 1 - தேதி முதல் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை- போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

அக் 1 - தேதி முதல் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை- போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

28/Sep/2020 04:07:59

ஈரோடு:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்குள் போக்குவரத்து நடைபெற்று வந்தது. அதன் பின்னர் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் போக்குவரத்து நடைபெற்று வந்தது.எனினும் வைரஸ் தாக்கம் குறையாததால் மீண்டும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வைரஸ் தாக்கம் குறையாமல் இருந்தாலும் கடந்த 1 -ஆம் தேதி முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. முதலில் மாவட்டத்திற்குள் மற்றும் போக்குவரத்து நடைபெற்று வந்தது.பின்னர் கடந்த 7-ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

ஈரோடு போக்குவரத்துக்கழகத்தின்  11 பணிமனைகளில் மொத்தம் 800 பேருந்துகள்  இயக்கப்பட்டு வந்தன. இதில் முதற்கட்டமாக 150 உள்ளூர்  பேருந்துகளும்  100 வெளிமாவட்ட பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் அதிகரித்த பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின்  எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தற்போது மாவட்டத்திற்குள் 250  பேருந்துகளும், வெளி மாவட்டங்களுக்கு 150  பேருந்துகளும் என 400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர 200-க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட பேருந்துகளும் ஈரோட்டுக்கு வந்து செல்கின்றன. தற்போது பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்  கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்று, வரும்  1.10.2020 -ஆம் தேதி முதல் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதைப்போல் வரும் 1.10.2020- ஆம் தேதி முதல் ஈரோட்டில் இருந்து தனியார்  பேருந்துகளும் இயக்கப்படும் என்று தனியார்  பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 269 தனியார்  பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில் 50 பேருந்துகள் உள்ளூரிலும் மீதமுள்ள பேருந்துகள் வெளியூர்,  வெளி மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.


Top