logo
சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  திரையுலகினர் இரங்கல்

சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்

17/Apr/2021 11:32:53

சின்ன கலைவாணர் என்றழைக்கப்பட்ட நடிகர் விவேக்(59) மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் திரையுலகப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், பெருங்கோட்டூர் இவரது சொந்த கிராமம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 1961 -இல் நவம்பர் 19 -ஆம் தேதி பிறந்தார். விவேகானந்தன் என்ற நடிகர் விவேக் தமிழ்நாடு தேர்வாணையம் அரசுப்பணிக்குத்தேர்ச்சி பெற்று சென்னை தலைமைச்செயலகத்தில்  பணியில் சேர்ந்தார்.

ஆனால், திரைப்படத்துறையில் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டார். அப்போதுதான்  இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் பார்வை பட்டு கடந்த 1987 -ஆம் ஆண்டில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். 


கடைசியாக அவர் 2020-இல் தாராள பிரபு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பத்மஶ்ரீ, பிலிம்பேர், தமிழக அரசின் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.  சிரிப்போடு சிந்திக்கவும் வைத்தவர். சிரிப்புடன் பகுத்தறிவு கருத்துகளையும் விதைத்தவர்.  மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்தவர். மாரடைப்பு காரண மாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலை யில்  சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலையில் காலமானார்.

தலைவர்கள் நடிகர்கள் இரங்கல்:

பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், கி. வீரமணி, டிடிவி. தினகரன்,  கமல்ஹாசன், ரஜினிகாந்த்,  புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

நேரில் அஞ்சலி செலுத்தியவர்கள்: 

அமைச்சர் டி. ஜெயகுமார், திமுக எம்பி. ஆ.ராசா, மா.சுப்பிரமணியன்,ஆர்.எஸ். பாரதி, பூச்சிமுருகன், நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த், எல்.கே. சுதீஷ், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சிவகுமார், பிரபு, சூர்யா, ஜோதிகா, குஷ்பு, திரிஷா.

அர்ஜுன், விக்ரம், கார்த்தி, அருண்விஜய், கவுண்டமணி, மனோபாலா,  சார்லி, கஞ்சா கருப்பு, கருணாஸ், சரத்குமார் இயக்குநர்கள் லிங்குசாமி, ஷங்கர், பி.வாசு, தம்பிராமையா, நடராஜ், நாசர்,  சுசீந்திரன், பொன்வண்ணன், எழில், கார்த்திக்சுப்புராஜ், மயில்சாமி, மன்சூர்அலிகான், யோகிபாபு உள்பட ஆயிரக்கணக் கானோர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  


Top