logo
 நலவாரியத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வருக்கு  கோயில் பூசாரிகள்  கோரிக்கை

நலவாரியத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வருக்கு கோயில் பூசாரிகள் கோரிக்கை

27/Sep/2020 09:25:58

கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கிராம கோயில் பூசாரிகள் வாரியத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென  கோயில் பூசாரிகள் நலச்சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு  கோயில் பூசாரிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி. வாசு  அனுப்பியுள்ள மனு விவரம்:

 கிராமக் கோயில் பூசாரிகள் நலன் கருதி கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் அறநிலையத்துறை அமைச்சரை தலைவராகவும்,  ஆணையரரை செயலாளராகவும் மற்றும் 9 பேர் அலுவல் சாரா உறுப்பினராகவும்  கொண்ட கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியம் செயல்பட்டு வந்தது. 

இதன் மூலம் பூசாரிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பழைய உறுப்பினர் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வந்தன. 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டு காலம் பூசாரிகள் நலவாரியம் பெயர் அளவில் கூட செயல்படவில்லை, இதனால் பூசாரிகள் கல்வி உதவி தொகை, விபத்து நிதி உதவி பெறமுடியாமல் ஆயிரக்கணக்கான பூசாரிகள்  சிரமத்துடன் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். நலவாரியத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூசாரிகள் உறுப்பினராக இருந்தும், கொரோனா நிவாரண நிதி சுமார் 20,000 பூசாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினருக்கும் பல்லாயிரக்கணக்கான பூசாரிகளுக்கு நிதி வழங்கப்படவில்லை.  இப்பிரச்னை தொடர்பான வழக்கில் வாரிய உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய

 வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில், பூசாரிகள் புதிய உறுப்பினராக சேரவும், பழைய உறுப்பினர் புதுப்பிக்கவும் விண்ணப்பித்தால் அதற்குரிய இணையத்தளம் செயல்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். நலவாரிய உறுப்பினர்களைச் சேர்க்கும் இணையத்தளம் சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ளது, மாவட்ட அலுவலகத்தில் இருந்து இணையத்தளத்தை நாங்கள் பயன்படுத்த முயவில்லை என்று விண்ணப்பங்களை புதுப்பிக்க மறுக்கின்றனர். இதனால், பூசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு பல்வேறு நலவாரியங்களை செயல்படுத்திவரும் நிலையில் பூசாரிகள் நலவாரியத்தை மட்டும் செயல்படுத்தாமல் இருப்பது தமிழக பூசாரிகள் மத்தியில் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. எனவே தமிழக முதல்வர் தலையிட்டு  பூசாரிகள் நலவாரியத்தில், புதிய உறுப்பினர்களின் சேர்க்கைக்கும், பழைய உறுப்பினர்களை புதுப்பிக்கவும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் இயக்கப்படும் கிராமக் கோவில் பூசாரிகள் நலவாரியத்திற்கான இணையத்தளத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கடந்த 5 ஆண்டு காலமாக செயல்படாத நலவாரியத்தை செயல்படுத்திட உடன் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்து, வாரியத்தில் உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பான மனுவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும் அனுப்பியுள்ளார்.


Top