logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் தாமரை இலை தண்ணீர்  போல ஒட்டாமல் நிற்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணி..?

புதுக்கோட்டை மாவட்டத்தில் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமல் நிற்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணி..?

18/Mar/2021 12:06:18

சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தாமரை இலை தண்ணீர்  போல ஒட்டாமல் நிற்கும்  திமுக-காங்கிரஸ் கூட்டணியால்  தேர்தலில் யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம் ஏற்படப்போகிறது என்ற பெரும் கேள்வி  அரசியல் நோக்கர்களின் முன்னே நிற்கிறது.

எல்லா கட்சிகளுக்கும் ஒரு கொள்கை உண்டு. ஆனால், தேர்தல் நேரத்தில் கட்சி கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. இதைத்தான், கொள்கை வேறு; கூட்டணி வேறு என்று முதல்வர் பழனிசாமி கூறினார். ஆட்சி அதிகாரம் என்பது கொள்கையைவிட முக்கியம் என்பது ஏறத்தாழ  எல்லாக் கட்சிகளுக்கும் பொதுக் கொள்கையாகி விட்டது. 

தமிழக சட்டப்பேரவைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி  கடந்த 2016 தேர்தலைப் போலவே 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் உறுதி செய்யப்பட்டு நீண்ட நெடிய  இழுபறிக்குப்பின் காங்கிரஸாரின் கண்ணீரில் தொகுதிகளின்  ஒதுக்கீடு திமுகவால் எழுதப்பட்டன.  கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் 8 -இல் மட்டுமே வெல்லமுடிந்தது. இதனால் திமுக அரியணை ஏறமுடியாமல் போனது. மேலும், காங்கிரஸுக்கு ஒதுக்கிய தொகுதிகளைக் குறைத்து  அவற்றில் திமுக  போட்டியிட்டிருந்தால்  நிச்சயம் ஆட்சியைப் பிடித்திருக்கும் என்கிற அரசியல் லாப நஷ்ட கணக்கு அப்போது மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது.

இதையடுத்து 2019-இல் நடந்த மக்களவைத் தேர்தலில் வழக்கம் போல காங்கிரஸ்- திமுக கூட்டணி அமைத்து புதுச்சேரி-தமிழகம் உள்பட மொத்தம் 40 தொகுதிகளில்  தேர்தலை எதிர் கொண்டது. அப்போது வீசிய மோடி எதிர்ப்பலையால் 39 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி வாகை சூடியது. இந்த இமாலய வெற்றி நாடே வியப்புடன் உற்று நோக்கியது. தமிழகத்தில் இந்தக்கூட்டணி பெற்ற வெற்றியை வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் பெற முடியாமல் போனது  தமிழகத்தின் துரதிருஷ்டமே. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப்பிடித்திருக்குமானால்  அதில் தமிழகத்தின் பங்கு பெருமளவில் இருந்திருக்கும்.  

இது 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல் நிலவரம். 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்களவைத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற முக்கிய பங்காளியான காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குக்கு உரிய அங்கீகாரம் தருவதில் திமுக நடந்து கொண்ட விதம் கூட்டணி கட்சிகளை திக்குமுக்காட வைத்தது.  ஒவ்வொரு கட்சியும்  குறைந்தது நான்கைந்து கட்ட பேச்சு நடத்தின.  காங்கிரஸ் கட்சி தலைவர் கண்ணீர் சிந்தும்  அளவுக்கு  கூட்டணி பேச்சுவார்த்தையில்  திமுகவின்   கருத்துகளும், பிடிவாதமும் இருந்ததை உணர முடிந்தது.

ஒருவழியாக  ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டு   கூட்டணியில் உள்ள அனைவருமே கையொப்பமிட்டு தற்போது தேர்தல் களத்தில் நிற்கின்றனர். ஆனால், மனமொத்து நிற்கின்றனரா என்பது மாபெரும் கேள்வி. அதற்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில்  திமுக-காங்கிரஸ் இடையே உள்ள தேர்தல்  கூட்டணி தாமரை இலையில் தண்ணீர்  ஒட்டாமல்   கண்முன்னே விடையாக நிற்பதைப் பார்க்க முடிகிறது.

 திமுக-காங்கிரஸ் கூட்டணியில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவும், தலா ஒரு தொகுதியில் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. இதில், திருமயமும், ஆலங்குடியும் ஏறகெனவே வென்ற வேட்பாளர்களும்,  விராலிமலையில் ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளரும், புதுக்கோட் டையில் புதுமுக வேட்பாளரும் களத்தில் நிற்கின்றன.

இந்நிலையில், திமுக வேட்பாளர்கள்  தங்களது முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரிடம் பாராமுகமாகவே இருப்பதாக தெரிய வருகிறது.  தேர்தல் ஆலோசனைக் கூட்டமாக இருந்தாலும், வேட்பு மனு தாக்கல் நிகழ்வாக இருந்தாலும், வாக்கு  சேகரிப்பு  போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு முறையான அழைப்பு இல்லை.

  குறிப்பாக இங்கு இருக்கிறோம் வாருங்கள், அங்கு நிற்கிறோம் வாருங்கள் என்ற சம்பிரதாய அழைப்புகளாவே உள்ளன. புதுக்கோட்டையில் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருப்பவ ருக்கு இன்று (18.3.2021) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு பிரசாரம் செய்ய வரும் தகவலே தெரியவில்லை என்பதுதான் உச்சம்.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:  உள்ளாட்சித் தேர்தலில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களால் ஏற்பட்ட மனக்கசப்பு மாறவில்லை. இந்த சம்பவத்தின் போது  தமிழ்நாட்டில் வேறு எங்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணி இருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தக் கூட்டணி கிடையாது என்று திமுகவினர் விளையாட்டாக கூறினார்களோ அல்லது வினையாகக் கூறினார்களோ எனத்தெரியவில்லை.

ஆனால், தற்போது  நடக்கும் சம்பவங்கள் அந்த வார்த்தை வினையாகிவிட்டதோ என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. காலம் இன்னும் இருக்கிறது. கூட்டணி தர்மத்தை மதித்து  எங்களை அழைத்தால் மட்டுமே தேர்தல் பணியாற்றுவோம். பந்து திமுகவின் கைகளில் இருக்கிறது. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.  மீண்டும் இந்தக்கட்டுரையின் தலைப்பான தாமரை இலை தண்ணீர் போலவே  இருக்கின்றன இவ்விரு கட்சிகளின் உறவு..? ஒட்டுமா..?

By R.Mohan Ram, News Editor.

  


 

                                                                               

        


Top