logo
மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூல்: விண்ணப்பித்த 15 நாளில் ரேஷன் கார்டு- திமுக தேர்தல்  வாக்குறுதி

மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூல்: விண்ணப்பித்த 15 நாளில் ரேஷன் கார்டு- திமுக தேர்தல் வாக்குறுதி

14/Mar/2021 07:46:08

சென்னை: அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க மாதம் ஒரு முறை  மின் உபயோகம் கணக்கிடப்படும். விண்ணப்பித்த 15 நாளில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 போர்க்கால அடிப்படையில் மின் உற்பத்தியைப் பெருக்கி வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்.

 இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்கும் வகையில் மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் இரண்டு மாதங்களுக்கு 1000-யூனிட்களுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6000 ரூபாய் வரையில் பயன்பெறுவர்.மின்சாரக் கட்டணத்துடன் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் நிலைக் கட்டணம் 50 ரூபாய் தடை செய்யப்படும்.

 மின் கட்டணம் செலுத்துவதற்குத் தற்போது வங்கிகளில் செலுத்தும் முறை, இணையம் வழியாகச் செலுத்தும் முறை மற்றும் மின்வாரிய அலுவலகத்திலேயே நேரடியாகச் செலுத்தும் முறை என மூன்று வழிகள் நடைமுறையில் உள்ளன. இனி வீடுகளுக்குச் சென்று மின்சார மீட்டர் அலகுகளைக் கணக்கெடுக்கும் பணியாளரே மின் கட்டணத்தைப் பெற்றுக் கொள்வதற்கேற்ற நடைமுறையையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 செய்யூர் அனல்மின் நிலைய திட்டத்தையும் சிக்கல்களை அகற்றி, மீண்டும் உடனடியாகச் செயல்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் குறைத்து சூரியஒளி, காற்றாலை, போன்ற மாசற்ற மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து, அவற்றின் மூலம் 20,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து மக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் நலவாரியங்கள் மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்; நலவாரிய அமைப்புகளில் இதுவரை இடம் பெறாத தமிழ்நாடு புகைப்பட / வீடியோ கலைஞர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நல வாரியங்கள் புதிதாக உருவாக்கப்படும். மேலும், நலவாரிய உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம், மருத்துவ உதவி, கல்வி உதவித்தொகை, விபத்து இழப்பீட்டுத் தொகை முதலியவை சீரமைக்கப்பட்டு உயர்த்தி வழங்கப்படும்.

 அதிமுக அரசால் கைவிடப்பட்ட, போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசுத் துறை மற்றும் அரசு நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும். தொழிலாளர்கள் மீது அதிமுக அரசால் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

 உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைவெள்ளக் காலங்களில் நிவாரணத் தொகை 5000 ரூபாய் வழங்கப்படும்.

 திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்குவதற்குத் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்த வசதி செய்து தரப்படும்.

 மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய, அரசு மருத்துவக் கல்லூரிகளை திமுக அரசு உருவாக்கும்.

 அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும்.  ஊர்ப்புற நூலகர்களாகக் கிராமங்களில் பணியாற்றும் நூலகர்களுக்குக் கால முறையிலான பணி வழங்கப்படும். குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு 2020-2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2025-26 வரை  50 லட்சம் வேலை வாய்ப்புகளை தமிழக படித்த இளைஞர்களுக்கு வழங்கிட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும். இந்த மாபெரும் திட்டத்தினைத் திறம்பட நிறைவேற்றிட மாநில திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க அமைப்பு எனப்படும் நிறுவனம் உருவாக்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி மையங்களாக செயல்படும்.

 தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகள் பாலங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கும் பணிகளில் 75,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

இவர்களில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.  தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் கண்காணித்துப் பாதுகாக்கும் பணியில் 25 ஆயிரம் இளைஞர்கள் திருக்கோயில் பணியாளர்களாகப் பணியமர்த்தப்படுவர்.

 மக்கள் நலப் பணியாளர்களாக 25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவர். இவர்கள் அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடிப்படை நிலையில் பணி அமர்த்தப்படுவர். இவர்கள், ஒவ்வொரு கிராமத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டுப்பாட்டில் செயல்படுவர். 

தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றப்படும்.

 தமிழகத்தில் உள்ள பல்வேறு கனிமவளங்களைப் பாதுகாக்கவும், பெருக்கவும், பயன்பாட்டை முறைப்படுத்தவும், முறை கேடுகளை தடுக்க தனியாக ஒரு புதிய கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு மினரல்ஸ் லிட் (டாமின்) நிறுவனம் தொழில் நுட்ப ரீதியாக வலுப்படுத்தப்பட்டு, மாலிப்டினம், வெர்மிகுலைட், டியுனைட், கார்னட், டைட்டானியம் தாது மணல், மாக்னசைட், கிரானைட், ஜிப்சம், சுண்ணாம்புக்கல், டங்க்ஸ்டன் உள்ளிட்ட மாநிலத்தின் அரிய கனிம வளங்கள் எடுக்கப்படும் முயற்சிகள் சீராக்கப்படும்.

இதன் வாயிலாக அரசுக்குக் கிடைத்திடும் வருவாய் பன்மடங்கு அதிகரிக்க தேவையான புதிய கொள்கையும் செயல் திட்டமும் வகுக்கப்பட்டுத் தேவையான செயல்பாடுகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருவாரியாக இணைய வழித் தகவல் பரிமாற்றங்களின் மூலம்தான் நடைபெறுகிறது. இதனைத் தடுப்பதற்குத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர்  காவல் நிலையங்கள் அமைக்கப்படும். இந்தப் பணிக்கெனத் தகவல் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர்களுக்கு, உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, காவல் நிலையங்களில் நியமிக்கப்படுவர்.

 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதிஉதவித் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்குத் திருமணஉதவித் தொகையாகத் தற்போது வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும். 

வாரம் ஒருநாள் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். அப்படி விடுமுறை நாட்களில் பணிபுரிய நேரிட்டால் கூடுதல் பணிநேர ஊதியம் வழங்கப்படும். சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளைத் திமுக அரசு எந்த நிலையிலும் அனுமதிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன்

 கந்துவட்டிக் கொடுமையிலிருந்து ஏழை எளிய வணிகர்களைக் காப்பாற்றிட சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும், தலைச்சுமைகளிலும் காய்கறிகள், மீன் விற்பவர்கள், பூ விற்பவர்கள், பழம் விற்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், காலணி தயாரிக்கும் தொழிலாளர்கள்.

தேநீர் விற்பவர்கள், பழரசம் விற்பவர்கள், இளநீர் விற்பவர்கள், பஞ்சர் ஒட்டும் தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு வாரத் தவணைமுறையில் திருப்பிச் செலுத்தும் வகையில் வட்டியில்லாக் கடன் 15,000 ரூபாய் வரையில் எளியமுறையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  

மேலும், இவர்களது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து நகரங்களிலும் உள்ளாட்சிநிர்வாகம், காவல்துறை, வணிகர் சங்கங்கள், குடியிருப்போர் பிரதிநிதிகள் அடங்கிய ஒழுங்குபடுத்தும் குழு ஒன்று அமைக்கப்படும்.

சிறு வியாபாரிகளுக்கான வணிகர் சுய உதவிக் குழுக்கள் அமைத்துத் தரப்படும்.  கிராமப்புறத்தில் வாரச்சந்தை, திருவிழா, தெருவோரங்களில், நடமாடும் கடைகள் அமைக்கும் சிறு வணிகர்களிடமும் உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படும்.

விண்ணப்பித்த 15 நாளில் ரேஷன் கார்டு: குடும்ப அட்டைகள் இல்லாத தகுதியானவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப் படும்.  நியாயவிலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் சர்க்கரையின் அளவு உயர்த்தப் பட்டு மாதம் தோறும் ஒரு கிலோ கூடுதலாக வழங்கப்படும். மேலும், அ.தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்ட உளுத்தம் பருப்பு மீண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

நீர் வளம் காக்கும் பணியில் 75,000 இளைஞர்கள்:  தமிழகத்திலுள்ள நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் உள்ளிட்ட அனைத்து நீர் வளங்களையும் வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும் கண்காணிக்கவும் அவை தொடர்பாக அரசின் சார்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு பெற்ற 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர். இவர்களில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.




Top