logo
தேர்தலைக்காரணம் காட்டி... தேசத்தை கட்டமைத்த  தேசத்தலைவர்களை அவமரியாதை செய்யலாமா?

தேர்தலைக்காரணம் காட்டி... தேசத்தை கட்டமைத்த தேசத்தலைவர்களை அவமரியாதை செய்யலாமா?

07/Mar/2021 07:45:54

ஈரோடு, மார்ச்: தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்கிறது. வேட்பாளர்கள் அறிவிப்புக்குப்பின் தேர்தல் திருவிழா களைகட்டத்தொடங்கும். இதை அனைவரும் அறிவோம். ஆனால் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டு  இந்த தேசத்தை கட்டமைத்த தேசியத்தலைவர்களை தேர்தல் விதிகளை காரணம் காட்டி அவமரியாதை செய்யலாமா என்ற கேள்வி நம் அனைவரிடம் எழுந்து நிற்கிறது.

 

தமிழகத்தில்  வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம்  தேதி சட்டப்பேரவை  பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி  தேர்தல் நடத்தை விதிகள்  நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டால், அரசியல் கட்சி சார்ந்த தலைவர்களின் சிலைகள், அரசியல் சார்ந்த கல்வெட்டுகள், கொடிக்கம்பங்கள் உள்ளிட்டவற்றை மறைக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிகளில் ஒன்றாகும்..

அதன்படி, ஈரோடு மாவட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.கதிரவன் உத்தரவின்பேரில் பொது இடங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளின் அடையாளங்களை மக்களின் பார்வையிலிருந்து மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  ஈரோடு மாநகராட்சி பகுதியில்  மாநகராட்சி ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


ஆனால், அரசியல் கட்சி அடையாளங்களை மறைப்பதாக கூறி காந்தி, நேரு, காமராஜர், அப்துல்கலாம்  போன்ற தேசத்தலைவர்களின் உருவப்படங்கள் மீது சுண்ணாம்பை கரைத்து ஊற்றி அவமரியாதை செய்துள்ள சம்பவம்   சமூக ஆர்வலர்களையும், சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.


இது பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு பள்ளிக்கூடங்கள் உள்ளன. அரசு பள்ளிக்கூடங்கள், மாநகராட்சி பள்ளிக்கூடங்கள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. சில அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும்  வகையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

 

தேசத்தலைவர்களை அடையாளப்படுத்தி அவர்களது பெருமையையும் தியாககங்களையும் நினைவூட்டும் நோக்கில் நமது ஈரோட்டிலுள்ள பல்வேறு  பள்ளிகளின் சுற்றுச்சுவர்களில்  தலைவர்களின் உருவப்படங்களை அந்தந்த பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் ஓவியர்கள் மூலம் வரைந்து வைத்து உள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், தேர்தல் வந்து விட்டால், இந்த பள்ளிகள் அனைத்தும் வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால்  பள்ளிச்சுவர்களில்  வரைந்துள்ள  தேசத் தலைவர்கள்  உருவங்களை மறைக்கும் நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஒவ்வொரு தேர்தலின்போது இது போன்ற சோதனைகளை இந்தத்தலைவர்கள் சந்திக்கின்றனர். மறைந்த இந்தத்தலைவர்களால் வாக்குச்சிதறும் என்று யாராவது நம்பினால். அது அவநம்பிக்கைதான்  என்றே சொல்லமுடியும்..


 ஆனால்,  நேரு, காந்தி, அப்துல்கலாம், காமராஜ் போன்ற தலைவர்களின் படங்களை மறைக்கும்போது எந்த சேதமும் ஏற்பட்டு விடாமல் மறைக்க வேண்டும் என்பதை ஊழியர்கள் உணர்ந்தாகத் தெரியவில்லை.  மாநகராட்சி எஸ்.கே.சி. சாலையிலுள்ள ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரில்  வரையப்பட்டு உள்ள தலைவர்களின் உருவப்படங்களின்  மீது பொறுப்பற்ற வகையில்  சுண்ணாம்பை கரைந்து ஊற்றி தலைவர்களுக்கு அவமரியாதை செய்துள்ளனர்.  இது எந்த வகையான நடவடிக்கை என்று தெரியவில்லை. இது கண்டனத்துக்குரியது.


தேர்தல் விதிமுறைகள என்ற பெயரில் பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவ,மாணவிகளின் படிப்புக்காக  வரையப்பட்டு உள்ள தேசிய பூ தாமரை, தமிழகத்தின் மாநில பழம் மாம்பழம், மனித உறுப்புகளில் கை என்று எந்த அடையாளம் இருந்தாலும் அவை மீண்டும் பயன்படாத வகையில்  அழிக்கும் முரட்டுத்தனம் எதற்காக. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என்று 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்  வரும்போதெல்லாம் இந்தத் தலைவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. தேசத்த தலைவர்களை அவமதித்தவர்கள் மீது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி. கதிரவன்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என்றார் அவர். 

Top