14/Feb/2021 08:43:27
விராலிமலை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 25-ஆம் தேதி நடப்பதை யொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது
விராலிமலையில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலில் முருகன் அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி வழங்கியதாக தல வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் தைபூசத்தின் போது தேரோட் டம் நடைபெறும். மற்ற விழாக்களான கந்த சஷ் டிவிழா, கார்த்திகை தீபம் போன்ற விழாக்களில் சுற்றுவட்டாரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்வர்.
இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் முக்கிய பிரமுகர்கள், கோயில் அதிகாரிகள் தீர்மானித்தபடி கோயில் பாலாலயம் 2018 -ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்தது. இதையடுத்து புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் வரும் 25-ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த ஜனவரி 13-ஆம் தேதி யாக சாலை அமைப்பதற்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது, இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமை வகித்தார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் இலுப்பூர் டிஎஸ்பி அருள்மொழிஅரசு, கோயில் செயல் அலுவலர் பாரதிராஜா, விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.