22/Jan/2021 12:24:51
புதுக்கோட்டை,ஜன: மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் சென்று மீன்பிடிப்பதை இந்தியா, இலங்கை ஆகிய இருநாட்டு அரசுகளும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா(30), வி.நாகராஜ்(52), என்.சாம்(28), எஸ்.செந்தில் குமார்(32) ஆகிய 4 மீனவர்கள் கடந்த ஜன.18-ஆம் தேதி கடலுக்கு மீன்படிக்க சென்றனர்.
மறுநாள் காலையில் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு திரும்பவில்லை. இது குறித்து மீன்வளத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது, இலங்கை கடல்படையினர் தங்களது ரோந்து படகு மூலம் இவர்களது விசைப்படகில் இடித்து அதே இடத்திலேயே மீனவர்களுடன் படகை மூழ்கடித்தது தெரியவந்தது.
இது, சக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை கடற்படை தீவிரமாக தேடி வந்தது. அதில், செவ்வாய்கிழமை இரவு 2 சடலங்களும், புதன்கிழமை 2. சடலம் என மொத்தம் 4 சடலங்களும் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 4 சடலங்களும் யாழ்பாணம் மறுத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுகுறித்து முறையான விசாரனை நடத்த வேண்டும். சடலங்களை வெளிப்படைத் தன்மையோடு பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த மீனவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.