logo
தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது எனது கடமை: ராகுல் காந்தி

தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது எனது கடமை: ராகுல் காந்தி

14/Jan/2021 07:10:55

மதுரை: தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது எனது கடமை என தெரிவித்தார் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டை பார்க்க வந்த  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

 பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும், இன்று முதல் பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.

 மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி, உலக அளவில் வரவேற்பை பெற்றது.

  மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை நடந்தது. இதனை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும், திமுக இளைஞரணி செயலர் உதயநிதியும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடியவாறே பார்த்து ரசித்தனர். ராகுலுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உள்ளிட்ட காங்கிரஸ்  நிர்வாகிகளும்  வந்தனர். ஜல்லிக்கட்டு குறித்து போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு ராகுலும், உதயநிதியும் பரிசு வழங்கினர்.

இந்த விழாவில் ராகுல் பேசியதாவது : தமிழக மக்களுக்கு எனது வணக்கம். இந்த விழாவை பார்க்கும்போதும், ஜல்லிக்கட்டில் பங்கெடுத்தவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியடைகிறேன். மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டை ஒருங்கிணைத்துள்ளனர். தமிழ் கலாசாரம், பண்பாட்டை நேரில் பார்க்க வந்துள்ளேன். தமிழர்களின் உணர்வுகளையும், பண்பாட்டையும் கற்று கொள்ள இங்கு வந்துள்ளேன். 

தமிழகம், தமிழ்மொழி, தமிழ் கலாசாரம் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம். தமிழை புறக்கணிக்க நினைப்பவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கவே வந்துள்ளேன். தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றார். 

இதையடுத்து, உதயநிதி பேசுகையில், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். மதுரை என்றாலே வீரம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்க்க முதல்முறையாக வந்துள்ளேன். தொடர்ந்து இனி வரும் ஒவ்வொரு ஆண்டுகளில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க வருவேன். விழாவினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.


Top