logo
ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி: துணை இயக்குனர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி: துணை இயக்குனர் தகவல்

12/Jan/2021 08:22:24

ஈரோடு, ஜன:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க இங்கிலாந்து ,அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்தியாவில் வரும் 16-ந் தேதி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இதற்காக  கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதைப்போல் கோவேக்சின் தடுப்பூசியும் அடுத்த கட்டமாக பயன்பாட்டிற்கு வர உள்ளது. 

தமிழகத்தில் முதல் கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி மருத்துவர்கள் ,செவிலியர்கள் பாராமெடிக்கல் ஊழியர்கள் மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 6 லட்சம் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஒத்திகை தமிழ்நாட்டில் சென்னை திருவள்ளூர் கோவை நீலகிரி திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தி பார்க்கப்பட்டது. ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை அந்தந்த சுகாதாரத் துறையினர் மூலம் நடத்தப்பட்டது. இது திருப்திகரமாக இருந்தது.

  ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, சிறுவல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி உள்பட 5 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.இதுவும் திருப்திகரமாக இருந்தது.

இதையடுத்து, வரும் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன் களப்பணியாளர்களான டாக்டர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதற் கட்டமாக கோவிஷுல்டு தடுப்பூசி போடப்படுகிறது.  இது தொடர்பாக ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்தில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் கொரோனா  தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரப்பணிகள்  துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள்,நர்சுகள்,சுகாதாரப் பணியாளர்கள் என 10 ஆயிரம் பேருக்கு மேல் கண்டறியப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இதையடுத்து வரும் 16-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, சிறுவல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை (கேர் 24) ஆகிய ஏழு இடங்களில் கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டமாக போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு பின் மீண்டும் ஒரு ஊசி போடப்படும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர்  செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Top