11/Jan/2021 08:28:24
அனுமன் வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கேசரி மைந்தன் ஆஞ்சநேயர் மார்கழி மாதம் அமாவாசை நாளில் மூலம் நட்சத்திர நாளில் அவதரித்தவர் என்று தென்னிந்தியாவில் கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் சைத்ர மாதம் பௌர்ணமியில் கொண்டாடுகின்றனர். அனுமன் ஜயந்தி கொண்டாடப்படும் நாள் குறித்து சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.
அனுமன் ஜயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். அனுமன்ஜயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவருந்தாமல், ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி வழிபட வேண்டும். வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது.
அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமானுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்து வழிபடலாம். நித்திய சிரஞ்சீவியாகத் திகழும் அனுமன் இன்றும் நம்மோடு சூட்சும வடிவில் இருக்கும் தெய்வம். மனமுருகிப் பிரார்த்திப்பவர்க்கு பிரத்யட்சமாகத் தோன்றி அருள்புரியும் தெய்வம்.
அனுமனுக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகிறோம். சிலரோ காரமான மிளகு வடை மாலை சாத்துவார்கள். வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை சார்த்தி வழிபடுவார்கள். வடைமாலை தென்னிந்தியர்கள் காரத்தை அதிகம் விரும்பி உண்பார்கள். ஆதலால், எளிதில் கிடைக்கும் உப்புடன், காரமும் இயற்கையாகச் சேர்ந்துவிட்டது வடையுடன். ஆதலால் இங்கு உப்பு மற்றும் மிளகு சேர்த்து காரமாகச் செய்யப்படும் வடைகளினாலான மாலை ஆஞ்சநேயருக்குப் படைக்கப்படுகிறது.
வட இந்தியாவில் கரும்பு அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதனால் சர்க்கரை உற்பத்தியும் அதிகம். வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு இனிப்பு மிகவும் பிடித்தமான உணவு. அங்கே பெரும்பாலான மக்களுக்குக் காலை உணவே ஜாங்கிரிதான். அந்த ஜாங்கிரியும் ராகுவுக்குப் பிடித்தமான உளுந்தினால்தான் செய்யப்படுகிறது. ஜாங்கிரி மாலை ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலை சார்த்தினாலும், காரமான வடைமாலை சார்த்தினாலும், இரண்டுமே உளுந்தினால் ஆனது என்பதே உண்மை. இரண்டுமே ராகு தோஷத்திலிருந்து நம்மை விடுவித்து, நல்லது செய்யும் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்று காஞ்சி மஹா பெரியவர் கூறியுள்ளார்.
அனுமனின் சக்தி அனுமானுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். சகலதோஷம் நீங்கும் ராகுவின் தோஷத்திலிருந்து விடுபட மட்டுமல்லாமல், காரிய சித்திக்காகவும் அனுமனுக்கு வடைமாலை சார்த்தப்படுகிறது.
அனுமனுக்குச் சார்த்தப்படும் வடைமாலை செய்வதற்கு, தோல் நீக்காத கறுப்பு உளுந்துதான் பயன்படுத்தப்படுகிறது. ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத் என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.