logo
பயிர்களுக்கான காப்பீடுகளை உரிய நேரத்தில் விவசாயிகள் செய்ய வேண்டும்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

பயிர்களுக்கான காப்பீடுகளை உரிய நேரத்தில் விவசாயிகள் செய்ய வேண்டும்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

01/Jan/2021 04:18:43

புதுக்கோட்டை, ஜன:  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்  காணொளிக்காட்சி வாயிலாக  நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர்  பி.உமாமகேஸ்வரி  மேலும் பேசியதாவது:

தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் காணொளிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறை கேட்பு நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 758.2மி.மீட்டருக்கு பதிலாக 933.0 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 23 சதவீதம் கூடுதலாகும். டிசம்பர் மாதத்தில் கிடைக்க வேண்டிய இயல்பான மழையளவு 67.60 மி.மீ ஆகும். ஆனால்,  இயல்பான அளவைவிட  216.1 மி.மீ  மழை பெய்துள்ளது.

மேலும் 2020-21-ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் முடிய நெல் 84,884 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள்1,737எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 2,215 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 8,259 எக்டர் பரப்பளவிலும், கரும்பு  1,017 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 29 எக்டர் பரப்பளவிலும், தென்னை 10,857 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 162.455 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 30.44 மெ.டன் பயறு விதைகளும், நிலக்கடலை 65.75 மெ.டன், சிறுதானியங்கள் 11.87 மெ.டன், எள் விதைகள் 3.211 மெ.டன் விதைகளும் இருப்பில் உள்ளது. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண் விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் வழங்கிடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்கத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 5,841 மெ.டன்னும், டிஏபி 1,138 மெ.டன்னும், பொட்டாஷ் 3,059 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 5,176 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

­

விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும் பொழுது கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு சென்று தங்களது கைரேகையினை பதிவுசெய்து உரம் வாங்கிடவும், மண்வள அட்டையில் பரிந்துரை செய்துள்ள உர அளவினை வாங்கி பயன்பெற வேண்டும். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கான ராபி பருவத்தில்; விவசாயிகள் அனைவரும் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல்--III ,  மக்காச்சோளம்- III நிலக்கடலை, உளுந்து, கரும்பு மற்றும் எள் ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 மேலும் இயற்கை இடர்பாடுகளினால்; ஏற்படும்  மகசூல் இழப்பு மற்றும் இதர பாதிப்புகளிலிருந்து வாழ்வாதாரத்தினையும், வருவாய் இழப்பினையும் சரி செய்துகொள்ள திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரிபயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் நெல் (நவரை) -III பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை எக்டேருக்கு ரூ.1,130 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 1.3.2021 ஆகும். மக்காச்சோளம்--III பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை எக்டேருக்குரூ.889 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 15.2.2021 ஆகும்.

 நிலக்கடலை பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை எக்டேருக்கு ரூ.921 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 15.2.2021 ஆகும். மேலும் உளுந்து பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை எக்டேருக்கு ரூ.613 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 15.2.2021 ஆகும்.

எள் பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை எக்டேருக்கு ரூ.265 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 15.2.2021 ஆகும்.  கரும்பு பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை எக்டேருக்கு ரூ.6,422 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 31.10.2021 ஆகும்.

விவசாயிகள் காப்பீடு செய்ய கடைசி நாள் வரை காத்திராமல் முன் கூட்டியே முன்மொழிவுப் படிவம், பதிவுப் படிவம், அடங்கல் 2020-21, சிட்டா நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுச் சேவை மையங்கள் ஆகியவற்றில் பதிவு செய்து பயனடைய வேண்டும்.

 எனவே தமிழக அரசு செயல்படுத்தி வரும் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி. கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். சந்தோஷ்குமார், துணை இயக்குநர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Top