logo
புதுக்கோட்டை அருகே  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: குற்றவாளிக்கு மூன்று  தூக்கு தண்டனைகள்

புதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: குற்றவாளிக்கு மூன்று தூக்கு தண்டனைகள்

30/Dec/2020 10:55:03

புதுக்கோட்டை, டிச: புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 3 தூக்குத் தண்டனையும், ஓர் ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அருகேயுள்ள கண்மாய்க் கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.இவ்வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி சாமிவேல் என்ற ராஜாவை (25) ஏம்பல் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, குற்றவாளிக்கான தீர்ப்பை மாவட்ட மகளிர் நீதிபதி முனைவர் ஆர். சத்யா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

தீர்ப்பு விவரம்: குற்றவாளி சாமிவேல் என்ற ராஜாவுக்கு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் தூக்குத் தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் மற்றொரு தூக்குத் தண்டனையும், அதே சட்டத்தின் மற்றொரு பிரிவின் கீழ் மேலும் ஒரு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும், எஸ்சிஎஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓர் ஆயுள் சிறைத் தண்டனையும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363-இன் கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிரிவு 201-இன் கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இவ்விரு தண்டனைகளுடன் தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் தலா இரு மாதங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

மேலும், கொல்லப்பட்ட சிறுமியின் தாய்க்கு, ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய சிறப்பு அரசு வழக்குரைஞர் த. அங்கவிக்கு நீதிபதி தனது தீர்ப்பில் பாராட்டு தெரிவித்தார்.

 போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகளில் 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதன்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 9ஆம் தேதி விசாரணை தொடங்கி, தற்போது டிசம்பர் 29-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 24 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன் நீதிமன்றத்துக்கு நேரில் வந்திருந்தார்.

 ஏற்கெனவே கடந்த ஜூலை 16-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டபோது குற்றவாளி ராஜா தப்பியோடிய சம்பவமும் நடந்திருந்ததால், தற்போது செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டபோது, பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ராஜா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Top