logo
2020 எப்படி இருந்தது? இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய முக்கிய நிகழ்வுகள்

2020 எப்படி இருந்தது? இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய முக்கிய நிகழ்வுகள்

30/Dec/2020 09:17:40

பல ஏற்ற இறக்கங்களையும் கொண்ட இந்த ஆண்டில் இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளாக இவை கருதப்படுகிறது

2020 : எத்தனையோ ஏற்ற இறக்கங்களை நாம் சந்தித்திருக்கின்றோம். ஆனாலும் நல்லதாக நாம் அனைவரும் ஏதோ வகையில் கொரோனா தொற்று ஏதும் இல்லாமல், நம் நண்பர்களோடு, உறவினர்களோடு மகிழ்ச்சியாக இருப்பதையே இந்த ஆண்டின் மகத்தான சாதனையாக கருதலாம். நீங்கள் நலமாக இருப்பதையே நாங்களும், உங்களின் உறவினர்களைப் போல, விரும்புகின்றோம். நடந்த யாவும் நன்மைக்கே என்ற மனநிலையில் இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய 10 முக்கிய நிகழ்வுகளை நாம் இங்கே காண்போம்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டம்

டெல்லி மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். 6 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர் அல்லாத இதர சமயத்தினருக்கு குடியுரிமை வழங்குவதை உறுதி செய்கிறது அந்த சட்டம். இருப்பினும், அந்த சட்டத்திற்கு எதிராக, கொரோனா தொற்று தீவிரம் அடையும் வரையில் தில்லி ஷாஹீன்பாக் மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது.

ரொட்டி துண்டுகளும் இரத்தமும்; பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளார்கள்

மார்ச் மாதம் 23-ஆம் தேதி அன்று முதலாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொழிலகங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ரயில்கள், பேருந்துகள், விமான போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டன. சமூக இடைவெளியை பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டது. 

யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டனர். பெருநகரங்களில் இருந்து பணம் படைத்தோர் தங்களின் கார்களில், ஈ பாஸ் பெற்று சொந்த ஊர்களுக்கு திரும்ப, பெருநகரங்களில் கூலி வேலை செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்கும், மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சென்றனர். தென்னிந்தியாவில் இருந்து பலர் வட இந்திய மாநிலங்களுக்கு சென்றனர். அதுவும் கையிலும், இடுப்பிலும் குழந்தைகளை ஒரு பக்கம் சுமந்தபடி. மற்றொரு கையில் தங்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு ஆயிரக்கணகான மைல்கள் நடந்தே சென்றனர்.

சாலை வழியாக வந்தால் தடுத்து நிறுத்தப்படுவோம் என்று நினைத்த புலம்பெயர் தொழிலாளர்களில் சிலர் ரயில் தண்டவளாங்கள் வழியாக தஙக்ளின் ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர். ஒரௌங்காபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் களைப்பின் காரணமாக தண்டவாளத்திலேயே தூங்கியுள்ளனர். மே 8ம் தேதி அதிகாலை, ஔரங்கபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறிச் செல்ல அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புயல்கள்

இந்த வருடம் இந்திய மாநிலங்களை மூன்று புயல்கள் தாக்க, தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்தி வந்தனர். மே மாதம் 18 முதல் 20ம் தேதி வரை அம்பன் புயல் மேற்கு வங்கத்தை தாக்க,  புரெவி புயல் தமிழகத்தில் கடலூருக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடந்தது. நிவர் புயல் இலங்கையை கடந்து ராமநாதபுரம் அருகே வெகு நேரம் நிலைத்து நின்றது. இதனால் தென் தமிழகத்தில் வழக்கத்தை காட்டிலும் அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டது. 

இதற்கு முன்பு ஏற்பட்ட புயல்களை போன்று பெரிய அளவு சேதாரம் ஏற்படுத்தாமல் நல்ல பொழிவை கொடுத்தது நிவர் மற்றும் புரெவி புயல்கள். ஆனால் அம்பன் புயலின் தாக்கத்தை மேற்கு வங்கம் மட்டும் அல்லாமல் அசாமும் உணர்ந்தது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை உருவாக்கியது. அதீத மழைப் பொழிவின் காரணமாக ஐதராபாத்திலும் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது.

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணம்

உலக அரங்கில் சிறைச்சாலையில் நடைபெறும் கொடூரங்களை குறைக்க செயல்பாட்டா ளார்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். காவல்நிலையங்களில் விசாராணைக் காக அழைத்து செல்லப்படும் சிலர் உயிரற்றவர்களாக உறவினர்கள் கையில் சேர்வது பெரும் வேதனையை அளித்தது. இந்த ஆண்டு இது போன்ற ஒரு துயர் தமிழகத்தில் அரங்கேறியது.

பொதுமுடக்க நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடையை திறந்த வைத்ததிற்காக, ஜூன் 19-ஆம் தேதி இரவு, தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு  அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். பிறகு ஒரு நாள் இடைவெளியில் மகன் மற்றும் தந்தை உயிரிழந்தனர். இந்தியா அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செய்தி. அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியத்தின் பேரில் தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ், காவல் ஆய்வாளர் பாலகிருஷணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மூணார் நிலச்சரிவு 

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த சமயத்தில்,  ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி நள்ளிரவில், மூணார் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வரிசையாக அமைந்திருந்த 4  வீடுகள் அடித்து செல்லப்பட்டது. இரவில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில், தூங்கிய நிலையிலேயே 70 நபர்களும் உயிரிழந்தனர். சிலர் நீரில் அடித்து செல்லப்பட்டு அருகில் இருக்கும் அணையில் கண்டெடுக்கப்பட்ட சோகமான நிகழ்வுகளும் அரங்கேறியது. பாதுகாப்பான, உறுதியான வீடுகளையும், மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் அரசு உருவாக்கி தர வேண்டும் என்று ராஜமலை பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

விமான விபத்து

கேரளாவின் கோழிக்கோடு ஆகஸ்ட் மாதம் வந்தே பாரத் மூலம் இந்தியா திரும்பி வந்த ஏர் இந்தியா விமானம் விபத்திற்கு ஆளானது. இதில் 17 நபர்கள் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் உயிரிழந்த சோகமும் அரங்கேறியது.  இந்தியாவில் இருக்கும் மிகவும் சவாலான ஓடுதளங்களில் ஒன்று தான் கோழிக்கோடு விமான நிலைய ஓடுதளம். வழக்கத்திற்கு மாறான வேகத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது என்று பிறகு அறிவிக்கப்பட்டது.

ஹத்ராஸ் வழக்கு

உ.பி.யின் ஹத்ராஸ் பகுதியில் நான்கு மேல் சாதியை சேர்ந்த ஆண்கள் 19 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தாக்கிய நிகழ்வு இந்த ஆண்டு மேலும் ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கியது. அந்த பெண் செப்டம்பர் மாதம் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அந்த பெண்ணின் உடலுக்கு காவல்துறையினர், அந்த பெண்ணின் பெற்றோரின் அனுமதி ஏதும் இன்றி, அதிகாலை 2 மணிக்கு தகனம் செய்தனர். அந்த பெண்ணிற்கான இறுதி சடங்கிற்கு பிறகு, கலவரம் எழும் என்று எண்ணிய மாவட்ட நிர்வாகம் மக்களின் நடமாட்டத்திற்கும், ஊடகங்களின் அனுமதிக்கும் தடை விதித்தது. சி.பி.ஐ அந்த நான்கு நபர்கள் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

அசாதாரணமான முறையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவசாயிகளின் நன்மைக்காக என்று மூன்று முக்கியமான வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.  விவசாய பிரதிநிதிகளின் கருத்துகள், எதிர்க்கட்சிகளின் கருத்துகள் என எந்த ஆலோசனையும் இன்றி நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பலரும் மாநிலத்திற்குள் இந்த போராட்டம் நடைபெறும் என்று நினைத்திருந்த நிலையில், கூட்டம் கூட்டமாக, லாரி லாரியாக, ட்ராக்டர்களில் வந்து சங்கு உள்ளிட்ட தலைநகர் தில்லியின் எல்லைகளை முற்றுகையிட்டனர். 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையிலும் கூட இறுதியான முடிவு எட்ட்ப்படவில்லை.

விவசாயிகள் மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் மத்திய அரசோ திருத்தங்களை மட்டுமே முன்மொழிவு செய்து வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள்.

மறக்க முடியாத சில மரணங்கள்

பாலிவுட் நடிகர்கள் இர்ஃபான் கான், ரிஷி கபூர், மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோரின் மரணம் கலைத்துறையில் பெரும் இழப்பாக கருதப்பட்டது. அடுத்தடுத்து தலைசிறந்த கலைஞர்களை இழந்து வாடியது சினிமா துறை. அதே போன்று, தென்னிந்தியாவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு,  வி.ஜே. சித்ராவின் தற்கொலை, கோஷியும் அய்யப்பனும் திரைப்படத்தின் இயக்குநர் ஷாச்சியின் மறைவு பெரும் கவலையாக திரையுலகினரை ஆட்கொண்டது.

அரசியல் சதுரங்கம்

அரசியல் நகர்வுகள் அனைத்தும் தேசிய கட்சிகளை உலுக்கியது என்று தான் கூற வேண்டும். எதிர்பாராத நிகழ்வுகள், தனிமனிதர்கள் முடிவுகள் ஆட்சியை தக்கவைக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் காரணமாக அமைந்தது.

இந்த ஆண்டு காங்கிரஸில் இருந்த ம.பி.யின் துணை முதல்வர் ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவாக இருந்த 21 எம்.எல்.ஏக்களும் பதவி விலகினார்கள். இதனால் மார்ச் மாதத்தில் ஆட்சி கை மாறியது. பாஜகவின் சிவராஜ் சிங் சௌஹான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.

கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பீகாரின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.ஆகஸ்ட் 5-ஆம் தேதி, 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 

வீட்டுச்சிறையிலும், காவலிலும் வைக்கப்பட்ட தலைவர்கள் இந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். முதன்முறையாக டி.டி.சி என்று அழைக்கபப்டும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்வுகள் நடைபெற்றது. அதில் பிராந்திய கட்சியினரின் குப்கார் கூட்டணி அதிக இடங்களை தக்க வைத்தது.


Top