logo
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வசதி: தேர்தல் ஆணையம் தகவல்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வசதி: தேர்தல் ஆணையம் தகவல்

25/Dec/2020 01:03:25

சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வசதி ஏற்படுத்தி தரப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடைய உள்ளது.அதற்கு முன் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த, தேர்தல் கமிஷன் செயலர் உமேஷ் சின்ஹா தலைமையில் 6 பேர் உயர்நிலை குழு  டிச- 21 சென்னை வந்தது. இக்குழுவினரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கருத்துகளை தெரிவித்தனர். இக்குழுவினர்  2 நாள்களாக ஆலோசனை நடத்தினர்.

பின்னர் உமேஷ் சின்ஹா கூறியதாவது: அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய முகாம் ஏற்படுத்தப்படும். ஓட்டுச்சாவடிகளில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும். தேர்தல்களை, தேர்தல் ஆணையம் சிறப்பாக நடத்தியுள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சாய்வுதளம் கழிவறை மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 80 வயதானவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வசதி ஏற்படுத்தப்படும். விருப்பப்படும் முதியவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

நடப்பு சட்டசபை மே 24-ஆம் தேதி அன்று  முடிவடைகிறது. பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, மரபுப்படி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும். தேர்தலின் போது ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டது.கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் கண்காணிக்கப்படும். பணப்பட்டுவாடா, பரிசுப்பொருள் விநியோகம் போன்றவற்றை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் மாற்றப்படுவார்கள். ஒரு ஓட்டுச்சாவடியில் ஆயிரம் பேருக்கு மேல் கூடாதவாறு கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். காலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Top