logo
புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் :  பிரிட்டனில் இருந்து விமானங்கள் இந்தியாவுக்குள் வர டிச. 31 வரை தடை

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் : பிரிட்டனில் இருந்து விமானங்கள் இந்தியாவுக்குள் வர டிச. 31 வரை தடை

21/Dec/2020 09:59:22

தில்லி: புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ள பிரிட்டனில் இருந்து விமானங்கள் இந்தியாவுக்குள் வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு தடைவிதித்துள்ளன.

கனடா அரசு முதற்கட்டமாக 3 நாட்களுக்கு பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது. பல்வேறு நாடுகள் பிரிட்டனுடனான தரைவழி எல்லையை மூடிவிட்டன. தென் அமெரிக்காவில், அர்ஜென்டினா, சிலி மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் பிரிட்டனில் இருந்து புறப்படும் மற்றும் பிரிட்டன் செல்லும் நேரடி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

ஈக்வடார் நாடும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து விமானங்கள் இந்தியாவுக்குள் வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  22-ஆம் தேதி டிசம்பர் நள்ளிரவு 11.59 மணியில் இருந்து வருகிற 31-ஆம் தேதி டிசம்பர் நள்ளிரவு 11.59 மணி வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்குள் வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் 22-ஆம் தேதி டிசம்பர் 11.59 மணி வரை இந்தியாவுக்குள் வரும் பிரிட்டன் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே கட்டாயமாக பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Top