logo
ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 24 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க இடங்கள் தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 24 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க இடங்கள் தேர்வு

21/Dec/2020 06:10:26

ஈரோடு, டிச: தமிழகத்தில் மக்களுக்கு விரைவாக மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 14-ஆம் தேதி முதல் தமிழகத்தில் முதற்கட்டமாக பல்வேறு இடங்களில் அம்மா கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகிறது. அதனை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டத்திலும் 80 இடங்களில் அம்மா மினி  கிளினிக்குகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 24 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.

அதன்படி அம்மாபேட்டை பகுதிக்கு உள்பட்ட குப்பிச்சிபாளையம், குறிச்சி, பட்லூர், அந்தியூர் பகுதிக்கு உட்பட்ட பிரம்மதேசம், பவானி பகுதிக்கு உட்பட்ட தளவாய் பேட்டை, வைக்கேல் பாளையம், காளிங்கராயன் பாளையம், சென்னிமலை.

 ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம், சூளை, கோபி பகுதிக்கு உட்பட்ட வெள்ளாளன் கோட்டை, கே .மேட்டுப்பாளையம், எஸ் .கணபதிபாளையம்,  வெள்ளான் காட்டுபாளையம், கொடுமுடி பகுதிக்கு உட்பட்ட இச்சிபாளையம், மொடக்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட கஸ்பாபேட்டை, வெள்ளாங்காட்டுவலசு, நம்பியூர் பகுதிக்குட்பட்ட சாவக்கட்டுபாளையம்.

பெருந்துறை பகுதிக்கு உட்பட்ட சின்னவீரசங்கிலி, விஜயமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி பகுதிக்கு உட்பட்ட தொட்டம்பாளையம், மல்லியம்பட்டி, மாதம்பாளையம் டி என் பாளையம் பகுதிக்கு உட்பட்ட இரன்காட்டூர், ஒடையகவுண்டன் பாளையம்  ஆகிய  24 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது.  மாவட்டத்தில் இதுவரை 10 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள் திறந்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 24 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி வரை 10 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள்  திறக்கப்பட்டுள்ளன. படிப்படியாக மற்ற அம்மா அம்மினி கிளினிக்குகள் திறக்கப்படும். காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் கிராமப்புறங்களில் 7 மணி வரையும் இந்த அம்மா மினி கிளினிக்குகள் செயல்படும்.

 இங்கு ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் ,ஒரு உதவியாளர் இருப்பார்கள். பொதுமக்களுக்கு காய்ச்சல் இருமல் ,சளி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் உடல் நிலையைப் பற்றி தெரிந்து கொள்கின்றனர். குறிப்பாக கிராம மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே மருத்துவ வசதிகளைப் பெற முடிகிறது என்றனர். 


Top