logo
தடையால் உலக அளவில்  பௌலர்கள் சிரமப்படும் நிலைமை... சரியாகுமா எனக் காத்திருக்கும்  வீரர்கள்

தடையால் உலக அளவில் பௌலர்கள் சிரமப்படும் நிலைமை... சரியாகுமா எனக் காத்திருக்கும் வீரர்கள்

20/Dec/2020 10:05:05

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திவரும் தாக்கம் இன்னும் சரியாகவில்லை. விளையாட்டு போட்டிகளை இதுவரை இல்லாத அளவில் கொரோனா வைரஸ் பெரிதும் முடக்கிப் போட்டது.ஏறக்குறை 8 மாதங்கள் அவர்கள் தங்களது வீடுகளில் முடங்கிய நிலையில், கிரிக்கெட்டில் எச்சில் பயன்பாட்டிற்கு தடை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களையும் கொரோனா ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக முடங்கியது. அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கினர். பிட்னஸ் பயிற்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் அவர்களுக்கு சிறிதளவு கைகொடுத்த போதிலும் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பை அவர்களால் தங்களது வாழ்நாளில் மறந்துவிட முடியாது.

உலகளவில் லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் தந்த கொரோனாவின் பாதிப்பிலிருந்து கிரிக்கெட் உலகமும் தப்பவில்லை.வீரர்கள் அனைவரும் குறிப்பாக இந்திய வீரர்கள் 8 மாதங்கள் தங்களது வீடுகளில் முடங்கிய நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஐபிஎல் அவர்களுக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தை கொடுத்தது.

ஆயினும் முன்னதாக ஐசிசி கிரிக்கெட் பந்துகளில் சலைவா எனப்படும் எச்சிலை பயன்படுத்த தடை விதித்தது. இதுபோல பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், காலங்காலமாக நடைமுறையில் இருந்த எச்சில் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையே பெரிதாக பேசப்பட்டது. அதேபோல அது கிரிக்கெட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக உலகளவில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலர், எச்சில் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அதிகமாக பகிர்ந்தனர். அதற்கு மாற்று குறித்து ஐசிசி யோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இந்திய வீரர்களும் இந்த தடை குறித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்தனர்.

இந்த எச்சில் பயன்படுத்தும் தடை குறித்து ஜஸ்பிரீத் பும்ராவும் முன்னதாக தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். இந்த தடை மூலம் ரிவர்ஸ் ஸ்விங் அதிகமாக இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பௌலர்களை சர்வதேச அளவில் இந்த தடை முடமாக்கியுள்ளதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் தெரிவித்துள்ளார். இதனால் கிரிக்கெட் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார். பயோ செக்யூர் பபள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் இருந்தாலும், இந்த சலைவா தடைக்கு இன்னமும் மாற்று வழிமுறை கண்டுபிடிக்கப்படாததை அவர் சுட்டிக் காட்டினார்.

கிரிக்கெட்டில் 60 சதவிகிதம் சலைவாவும் 40 சதவிகிதம் வியர்வையும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த தடையால் பௌலர்கள் செயலிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தடை பேட்ஸ்மேன்களை ஆப்சைடில் ஆடக்கூடாது என்றும் ஆன்சைடில் மட்டுமே ஆட வேண்டும் என்று வற்புறுத்துவதை போன்றது என்றும் அவர் தெரிவித்தார்.

கிரிக்கெட்டின் ஒவ்வொரு வடிவமும் வித்தியாசமானது என்று சுட்டிக் காட்டிய சச்சின் டெண்டுல்கர், மற்ற வடிவங்களில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் வேறானது என்றும் கூறினார். அதற்கேற்ப எச்சிலுக்கு மாற்று வழிகளை இந்திய வீரர்கள் யோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மொத்தத்தில் இந்த எச்சில் பயன்பாட்டிற்கு ஏற்படுத்தப்பட்ட தடை பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டாலும், அது ஏற்படுத்திய தாக்கம் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாகவே காணப்பட்டது. கொரோனா உள்ளவரையில் இந்த தடை நீக்கப்படாது என்பது மட்டும் உண்மை


Top