logo
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியானால் திரையரங்கிலும் வெளியிட வலியுறுத்துவோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியானால் திரையரங்கிலும் வெளியிட வலியுறுத்துவோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

07/Dec/2020 06:00:10

சென்னை: நடிகர் விஜய் நடித்த  மாஸ்டர்  திரைப்படம் ஓடிடியில் வெளியானால், திரையரங்கிலும் அப்படத்தை வெளியிட வலியுறுத்துவோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேடர்ஸ் தகவல்  வெளியிட்டது.

இந்நிலையில்,  மாஸ்டர் படம் ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாகச் சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இதை மறுத்தது. படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட புகழ்பெற்ற ஓடிடி நிறுவனங்கள் எங்களை அணுகின. ஆனால், நாங்கள் திரையரங்குகளில் வெளியிடுவதையே விரும்புகிறோம். தற்போது நிலவி வரும் நெருக்கடிகளிலிருந்து திரைத்துறை மீண்டு வருவதற்கான நேரம் இது. திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுடனும், தமிழ் திரைத் துறை மீண்டு வருவதற்கும் துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். விரைவில் நல்ல செய்தியுடன் உங்களிடம் வருவோம் என்று எதிர்பார்க்கிறோம் என படக்குழு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது: மாஸ்டர் படத்தை ஜனவரி 13 அன்று திரையரங்கில் தான் திரையிடுகிறோம் என்று சொன்னார்கள். நானும் அதை ஆதரித்து நன்றியும் சொல்லியிருந்தேன். திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு எந்தப் படமும் ஓடிடி-யில் வெளியிடப்படவில்லை. மாஸ்டர் படத்தை ஒருவேளை ஓடிடி-யில் வெளியிட்டால் திரையரங்குகளிலும் அப்படத்தை வெளியிடுகிற சூழலை வலியுறுத்துவோம் என்றார்.


Top