logo
இயற்கை ஆர்வலர் மரம் தங்கச்சாமியின் நினைவுதினம்: மரக்கன்றுகள், பனைவிதைகள் நடவு.

இயற்கை ஆர்வலர் மரம் தங்கச்சாமியின் நினைவுதினம்: மரக்கன்றுகள், பனைவிதைகள் நடவு.

20/Sep/2020 06:10:18


இயற்கை ஆர்வலர் மரம் தங்கச்சாமியின் நினைவுதினத்தையொட்டி ஆலங்குடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரக்கன்றுகளை இளைஞர்கள், பொதுமக்கள் புதன்கிழமை நடவு செய்தனர். மேலும், ஆயிரக்கணக்கான பனைவிதைகளையும் நடவு செய்தனர்.

   புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் தங்கசாமி. தனது வாழ்நாள் முழுவதும் மரம் நடுவதையே லட்சியமாகக் கொண்ட இவர் தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மரங்களை நடவு செய்ததோடு, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் மரங்களின் அவசியம் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரும் பத்து மரக்கன்றுகளையாவது நடவு செய்ய வேண்டுமெனவும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். மேலும்,  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு பயணித்த மரம் தங்கசாமி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இயற்கையை பேணிக் காக்கவும் தனது இறுதிக்காலம் வரை போராடினார்.இந்நிலையில்  2018- ஆம் ஆண்டு செப்டம்பர் 16.ம் தேதி உடல்நலக்குறைவால் மரம் தங்கசாமி உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் தொடர்ந்து அவரது நினைவாக அவரது சொந்த ஊரான சேந்தன்குடி உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் பள்ளி கல்லூரி மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மரம் தங்கசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டதையொட்டி அவரது சொந்த ஊரான சேந்தன்குடி, கீரமங்கலம், நெடுவாசல், கொத்தமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியிலும் குருங்காடுகளை அமைக்கும் பணியிலும் இளைஞர்கள், பொதுமக்களும் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரம் தங்கசாமி மகன் கண்ணன் தலைமையிலானோர் பல வகையான மூலிகை செடிகளையும் சந்தனம் செஞ்சந்தனம் வேங்கை கருங்காலி உள்ளிட்ட மரக்கன்றுகளையும்  நடவு செய்தனர். இதேபோல், செரியலூர் கிராமத்தில் விதைப் பறவைகள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் 11 ஆயிரம் பனை விதைகளை ஏரி, குளம்,கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை நடவு செய்தனர்.


Top