logo
1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் 8 வயது அண்ணன், 6 வயது தங்கைக்கு அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் பரிசு

1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் 8 வயது அண்ணன், 6 வயது தங்கைக்கு அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் பரிசு

04/Dec/2020 09:48:24

சென்னை : உலகப் பொதுமறை திருக்குறளை மனப்பாடம் செய்து தலைகீழ் பாடமாக ஒப்புவிக்கும் அதிசய சிறுவர்கள் 8 வயது ஆகாஷ் ராஜா, 6 வயது நவ்யா. இருவரும் அண்ணன் தங்கை. இவ்விருவரின் இந்த அபாரத் திறமையை பாராட்டி தமிழக அரசின் சார்பில் தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சி இயக்குனர் முனைவர் விசயராகவன் சான்றிதழ் கொடுத்து வாழ்த்துக் கூறினார். துணை இயக்குனர் லலிதா உடனிருந்தார்.

முதலமைச்சரின் ஆணைப்படி 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் திருக்குறள் முற்றோதல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் எண்ணிக்கை 50 லிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டது அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாணவர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் நேர் ஆய்வு நிகழ்ச்சி  டிசம்பர்2-ஆம் தேதி  தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ விசயராகவன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 8 வயது மாணவர்  க. பி. எஸ் ராஜா (3-ஆம் வகுப்பு) க.பி. நவ்யா (1-ஆம் வகுப்பு) ஆகியோர் 1330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் திருக்குறள் முற்றோதல் பரிசுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் எந்த ஒரு திருக்குறளையும், எந்த எண்ணைக் குறிப்பிட்டாலும், அதிகாரத்தை குறிப்பிட்டாலும், வரிசையாகவும் மேலிருந்து கீழும் நடுவிலும் எந்த எண்ணைச் சொல்லிக் கேட்டாலும் மழலை குரலில் சொற்களை வியக்கும் வகையில் நல்ல உச்சரிப்புடன் எடுத்துக்கூறி தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழை வழங்கினார் விசயராகவன். அதேநேரம், அவர்களுக்கு திருக்குறளை சொல்லிக் கொடுத்திருக்கும் பெற்றோர்களையும், ஊக்குவித்து வரும் ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.

Top