logo
ஆலங்குடியில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு கட்டாய கரோனா பரிசோதனை.

ஆலங்குடியில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு கட்டாய கரோனா பரிசோதனை.

14/Aug/2020 07:00:49


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்வோரை போக்குவரத்து காவல்துறை உதவியுடன் வழிமறித்து கட்டாய கரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

   புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 3818 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இருப்பினும், பொதுமக்கள் போதிய விழிப்புணர்வின்றி, முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்து வருகின்றனர். இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.

   இந்நிலையில், கரோனா பரவலை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலங்குடியில் முகக்கவசம் அணியாமல் செல்வோரை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு வழிமறித்து, ஆலங்குடி அரசுப்பள்ளி பெண்கள் விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா பரிசோதனை முகாமுக்கு அழைத்துச்சென்று கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.


 இதுகுறித்து திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள் கூறியது:


கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே வெளியே செல்லக்கூடிய அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், பலர் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இதனால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும்  தொடர்ந்து,அதிகரித்து வருகிறது.

புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் முகக் கவசம் அணியாமல் செல்வோரை போக்குவரத்து போலீஸார் மூலம் நிறுத்தி, அவர்களுக்கு அங்குள்ள அரசு பள்ளி மாணவிகள் விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுபோன்று கடந்த 2 நாட்களில் 114 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின்போது தேவையான விவரங்கள் சேகரித்து வைக்கப்படுகின்றன.

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணியாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். கரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே சாலையில் செல்வோரை மறித்து பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.


Top