logo
கார்த்திகை திருவிழா - அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை திருவிழா - அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

29/Nov/2020 03:41:42

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்ற்பட்டது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர்.

 கார்த்திகை தீப திருநாள்:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 10-ஆம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின்மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, தீபம் ஏற்றுவதற்கான மகா தீபக் கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய்யும், காடா துணிகளும் தயார் நிலையில் இருக்கிறது.

 கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மதியம் 1.17 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை மதியம் 2.23 மணிக்கு நிறைவு பெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

கொரோனா தொற்றுக் காரணமாக, கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. மலை மீது ஏறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மலை மீது ஏற உள்ள 16 வழிதடங்களிலும் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 நாட்களுக்கு வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Top