logo
சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்:  தேவசம்போர்டு தலைவர் கடிதம்

சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்: தேவசம்போர்டு தலைவர் கடிதம்

25/Nov/2020 05:56:35

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 16-ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் பக்தர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்கள், மற்ற தினங்களில் 1000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வரக்கூடிய காலத்தில், தினமும் 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகவே கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரள தேவசம்போர்டு  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு, தேவசம்போர்டு தலைவர் வாசு கடிதம் எழுதி உள்ளார். அதில், சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறும்போது, சபரிமலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன், சுகாதாரத்துறை மந்திரி சைலஜா மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும்’ என்றார். சபரிமலையில் கடந்த 16-ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று வரையிலான 8 நாட்களில் 10,528 பேர் மட்டுமே சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Top