logo
அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும்: சுகாதாரத்துறைச் செயலர் தகவல்

அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும்: சுகாதாரத்துறைச் செயலர் தகவல்

24/Nov/2020 09:00:46

சென்னை: நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவை 24 மணி நேரமும் செயல்படும் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் விஜயபாஸ்கர், முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் சாதனங்களைப் பழுதின்றி வைத்திருக்க வேண்டும்.

 மழைக்காலங்களில் சுவர் இடிந்து விழுதலால் ஏற்படும் விபத்து, இடி மின்னல் விபத்துகள், பாம்பு மற்றும் பூச்சுக் கடிகள் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு நிவாரண முகாம்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதைக் கண்காணிக்க வேண்டும். மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை உறுதிப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Top