logo
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கையை  அரசு மனிதாபிமானத்தோடு பரிசீலிக்க கொமதேக வலியுறுத்தல்

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கையை அரசு மனிதாபிமானத்தோடு பரிசீலிக்க கொமதேக வலியுறுத்தல்

24/Nov/2020 06:44:05

சென்னை: கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் வளர்ப்பு தொகை உயர்வுக்கான போராட்டத்தை தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது. 2013-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களுக்கும், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கறிக்கோழி வளர்ப்பு தொகை கிலோ ஒன்றுக்கு ரூ.3 லிருந்து ரூ .3.50 -க்கு உயர்த்தியும், வருடம் வருடம் வளர்ப்பு தொகையிலிருந்து 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு உற்பத்தி நிறுவனங்களால் வழங்க வேண்டும்  என்றும் தீர்மானிக்கப்பட்டு இருதரப்பிலும்  ஒப்புக்கொள்ளப்பட்டது. 

ஆனால், கடந்த 7 ஆண்டுகாலமாக கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு வருடம் வருடம் வளர்ப்பு தொகையிலிருந்து உயர்த்தி வழங்க வேண்டிய 20 சதவீத தொகையை வழங்கவே இல்லை. 2013-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கறிக்கோழி வளர்ப்பு தொகையான கிலோ ஒன்றுக்கு ரூ. 3.50  தொகையே இன்றுவரை தொடர்கிறது.

கடந்த 7 ஆண்டுகளும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு வருடம் வருடம் வளர்ப்பு தொகையிலிருந்து 20 சதவீதத்தை உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தி வழங்கியிருந்தால் தற்போது கிலோ ஒன்றுக்கு கறிக்கோழி வளர்ப்பு தொகையாக 12 ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு கிடைத்திருக்கும். 

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தையும் கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களே மொத்தமாக எடுத்து கொண்டு விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்கள். கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் 1 கிலோ கறிக்கோழியின் உற்பத்திக்கு ஆகும் செலவை விட அதிக லாபத்திற்கு தான் விற்பனை செய்கிறார்கள். இப்படி பல மடங்கு இலாபத்தை ஈட்டும் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உரிய வளர்ப்பு தொகையை கொடுக்காமல் ஏமாற்றுவது ஏற்புடையதல்ல.

 கறிக்கோழி வளர்ப்புக்கு தேவையான கொட்டகை, குடிநீர், தினசரி பராமரிப்பு உள்ளிட்டவைகளின் செலவு தொகை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு உரிய வளர்ப்பு தொகை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது.

கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 50,000-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களும், அதை சார்ந்துள்ள 5 லட்ச தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

 எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உற்பத்தி நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக கிலோ ஒன்றுக்கு வளர்ப்பு தொகையாக 15 ரூபாய் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 


Top