logo
மத்தியப் பிரதேசத்தில் 11 மாதத்தில் 25 புலிகள் பலி

மத்தியப் பிரதேசத்தில் 11 மாதத்தில் 25 புலிகள் பலி

21/Nov/2020 05:17:01

போபால்: 11 மாதங்களில் 25 புலிகள் உயிரிழந்ததை தொடர்ந்து நாட்டில் அதிகமாக புலிகள் உயிரிழக்கும் மாநிலங்கள் பட்டியலில் மத்தியப் பிரதேசம் தொடர்ந்து 6 -ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

மக்கள் தொகைப் பெருக்கம் நகரமயமாக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு வனவிலங்குகளும் அழிவின் பாதையில் திரும்பியுள்ளன. இந்தியாவில் காணப்படும் புலி, சிங்கங்களில் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக அதன் வாழ்வாதாரத்தை பெருக்க முயற்சிகள் நடைபெற்று வருவதோடு ஆண்டு தோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கடந்த 11 மாதத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 25 புலிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதன்படி புலிகள் அதிகம் உயிரிழக்கும் மாநிலங்களில் தொடர்ந்து 6 ஆவது முறையாக மத்தியப் பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் நாட்டில் அதிக புலிகள் உள்ள மாநிலமாகவும் மத்தியப் பிரதேசம் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் படி 526 புலிகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 524 புலிகளும் உத்தரகண்டில் 442 புலிகளும் உள்ளன.

புலிகள் உயிரிழப்பு தொடர்பாக தெரிவித்துள்ள காடுகளின் முதன்மை தலைமை பாதுகாவலர் (வனவிலங்கு) அலோக் குமார், பெரும்பாலான புலிகள் இயற்கை காரணங்களால் இறந்தன. ஆனால் சில மரணங்கள் மனித-விலங்கு மோதலின் விளைவாகும் என தெரிவித்தார்.

மேலும், கன்ஹா புலி ரிசர்வ் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை 140 உயர்ந்துள்ளதாகவும், பந்தவ்கர் புலி ரிசர்வ் பகுதியில் குறைந்தது 125 பெரிய புலிகள் உள்ளன என்றும் கூறினார். சாதகமான வாழ்விடங்கள் காரணமாக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அதே நேரத்தில், இட நெருக்கடியும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு புலிக்கும் 10 சதுர கி.மீ -க்கும் குறைவாகவே இடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


 


Top