logo
இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான போலீஸ் நிலையம் திருச்சி மாவட்டத்தில்  திறப்பு

இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான போலீஸ் நிலையம் திருச்சி மாவட்டத்தில் திறப்பு

18/Nov/2020 10:55:09

திருச்சி: இந்தியாவிலேயே முதன் முறையாக, குழந்தைகளுக்கான பிரத்தியேக காவல் நிலையம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் போலீஸ் நிலைய வளாகத்தில் அண்மையில்  திறந்து வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் இந்தியாவிலேயே முதன் முறையாக, குழந்தைகளுக்கான பிரத்தியேக காவல் நிலையம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் போலீஸ் நிலைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா முன்னிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினார்.

பின்னர், ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:குழந்தைகளுக்கான மன நிலையை கண்டறிவது, அவர்களுக்கான கவுன்சிலிங் அளிப்பது என்பது சவாலானது. சர்வதேச நீதி மையம் கூட இதுதொடர்பான காவல் நிலையத்தை அமைப்பது என்பது முடியாத நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 11 இடங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கொரோனா காலத்தில் குழந்தைகள் திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை களைய சம்யோஜனா என்ற டோல் ப்ரீ எண் அனைத்து மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1800 121 1283 என்ற எண்ணை தொடர்பு கொண்டு குற்றச் சம்பவம் தொடர்பாக வீட்டிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் உட்பட யாரேனும் அழைக்கலாம்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவம் தொடர்பாக தமிழகத்திலிருந்து அதிகமான அழைப்புகள் வர பெறுகிறது. மேலும் மனநல ஆலோசகர் மூலம் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறைவதற்கு காரணமான காவல் துறையை பாராட்டுகிறேன். கொரோனா காலம் மட்டுமல்லாது குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Top