logo
புதுக்கோட்டைக்கு புகழ் சேர்த்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த நாள் (17.11 1920) .. சில நினைவலைகள்

புதுக்கோட்டைக்கு புகழ் சேர்த்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த நாள் (17.11 1920) .. சில நினைவலைகள்

18/Nov/2020 07:09:43

 காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன்  புதுக்கோட்டையிலுள்ள குலமது பாலையா பிரைமரி ஸ்கூல் மற்றும் சென்னையில் உள்ள ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியிலும் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார்

 தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார். 

மனம்போல மாங்கல்யம், கல்யாணப்பரிசு, பூவா தலையா, இரு கோடுகள், வஞ்சிக்கோட்டை வாலிபன், பார்திபன் கனவு, களத்தூர் கண்ணம்மா, கற்பகம், புன்னகை போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த அற்புதப் படைப்புகளாகப் போற்றப்பட்டது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள அவர், சுமார் 200 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் வெளியிட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.  

ஜெமினி கணேசன் அவர்கள், 1922  -ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் புதுக்கோட்டையில் ராமசாமி-கங்கம்மா தம்பதியருக்கு  மகனாக பிறந்தார். சிறுவயதில் தன்னுடைய தாத்தா நாராயண சாமி ஐயர் வீட்டில் வளர்ந்த ஜெமினி கணேசன் அவர்கள், அதன் பிறகு புதுக்கோட்டையிலுள்ள குலபதி பாலையா பிரைமரி ஸ்கூல் மற்றும் சென்னையில் உள்ள ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியிலும் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், விளையாட்டு, பேச்சு, பாட்டு எனப் பல திறமைகள் கொண்ட சிறந்த மாணவனாக வளர்ந்தார்.    

திரைத்துறையில் ஜெமினி கணேசனின் பயணம்: தன்னுடைய கல்லூரிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த ஜெமினி கணேசன் , ஆரம்ப காலத்தில் தான் படித்த கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின்னர், ஜெமினி பட நிறுவனத்தில் மேலாளராகப் பணியில் சேர்ந்த அவர், 1947 ஆம் ஆண்டு, தான் பணிபுரியும் நிறுவனமான ஜெமினி தயாரிப்பில் மிஸ் மாலினி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடம் தாங்கி நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு, 1952 -ஆம் ஆண்டு கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த தாய் உள்ளம் என்ற திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். இத்திரைப்படம், பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் கூட, விருது பெறத்தக்க சிறந்த படமாகப் பெயர் பெற்றது. 

வெற்றிப் பயணம்:

தொடக்கத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே வில்லன் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த ஜெமினி கணேசன் அவர்கள், அதற்கு அடுத்த ஆண்டே பெண் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக வேடம் ஏற்று நடித்தார். 1953 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதே ஆண்டில் வெளியிடப்பட்ட மனம்போல மாங்கல்யம் என்ற திரைப்படத்தில், அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்தார்.

இத்திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்று ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைபடத்தில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்திய ஜெமினி கணேசன் , இயக்குனர்களின் நாயகனாகவும், திரைக்கதாநாயகிகளின் நாயகனாகவும், சினிமா ரசிகர்களின் நாயகனாகவும் விளங்கி, தமிழ் திரைப்படத்துறையில் ‘காதல் மன்னன்’ என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றி, தனக்கென தனி பாணியில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, கற்பகம், சித்தி, பணமா, பாசமா, சின்னஞ்சிறு உலகம், வஞ்சிக்கோட்டை வாலிபன், கல்யாணப் பரிசு, பூவா தலையா, இரு கோடுகள், வெள்ளி விழா, புன்னகை, கண்ணா நலமா, நான் அவனில்லை போன்ற படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

 அதுமட்டுமல்லாமல், அவர் ஒரு முன்னணி கதாநாயகனாக இருந்தபொழுதும், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், முத்துராமன், ஏவி.எம். ராஜன் போன்ற பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க எப்பொழுதும் தயங்கியதே இல்லை. 1947 -ஆம் ஆண்டு தன்னுடைய திரைவாழ்க்கையினைத் தொடங்கி, 1953-க்கு பிறகு தொடர்ந்து கதாநாயகனாக முத்திரைப்பதித்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஜெமினிகணேசன், 1970 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த லலிதா என்ற திரைப்படமே அவர் கதாநாயகனாக நடித்த கடைசி படமாக அமைந்தது. அதன் பிறகு, தன்னுடைய இறுதிக்காலம் வரை கமல்ஹாசன், சிரஞ்சீவி, சத்தியராஜ், விக்ரம், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

இல்லற வாழ்க்கை:

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய இருபது வயதில் அலமேலு என்ற பாப்ஜியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள் பிறந்தனர். பின்னர், இந்தி நடிகையான புஷ்பவள்ளியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். அதன் பிறகு, 1953 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் என்று புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விஜயசாமூண்டிசுவரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் பிறந்தனர்.

விருதுகளும், மரியாதைகளும்:

கலைமாமணி விருது-1970 – காவியத் தலைவி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.1971 – மத்திய அரசால் பத்ம ஸ்ரீ’ விருது. 1974 – நான் அவனில்லை திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது.1993 – வாழ்நாள் சாதனையாளருக்கான சவுத் ஃபிலிம்பேர் விருது.‘ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது.

மறைவு:

தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினிகணேசன் அவர்கள், இறுதி காலத்தில் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு 2005  -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் தன்னுடைய 84 வது வயதில் காலமானார். 1947 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்பட வாழ்க்கையினைத் தொடங்கி. தான் இறக்கும் வரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த,. தமிழ் சினிமாவில் கோலோச்சினார். தனக்குக் கிடைத்த அத்தனைக் கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பெற்று அனைவராலும் காதல் மன்னன் எனப் புகழப்பட்டவர். இவர்மண்ணின் மைந்தர் என்பதில்  புதுக்கோட்டை பெருமை கொள்கிறது. தகவல்- டீஸக்ஸ் ஞானசேகரன், புதுக்கோட்டை.


 


Top