logo
பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை: கார்த்தி சிதம்பரம்.

பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை: கார்த்தி சிதம்பரம்.

10/May/2020 07:45:57

நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்தியமே இல்லை.இதுபோன்று,உண்மையை பேச நான் ஒரு போதும் வெட்கப்பட்டது இல்லை என்றார் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.


புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி வடகாடு உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணியாளர்கள்,முதியோர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கி மேலும், அவர் பேசியது: பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால்,நாட்டில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துவிடும்,அதனால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லை. 45 நாட்கள் மது கடையை மூடி வைத்துவிட்டு திடீரென திறந்ததாலே இவ்வளவு கூட்டம் ஏற்பட்டது. தமிழக அரசு ஊரடங்கு அமலில் இருந்த நாட்களில் ஒரு நாளைக்கு  2 மணி நேரம் மதுக்கடைகளை திறந்து இருக்கலாம் அல்லது நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இணையவழியில் மது விற்பனை குறித்து திட்டமிட்டு இருக்கலாம். கரோனாவுக்கு ஊரடங்கு தீர்வாகாது. தமிழகத்தில் பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். ஊரடங்கால், தமிழகத்தில்  வணிகர்கள், தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தற்போது,தமிழக அரசு அளித்துள்ள தளர்வுகள் பொருளாதார ரீதியாக அவசியமான ஒன்று. அரசு வழங்கியுள்ள ரூ.1000 போதாது, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது போல், ரூ.7500 நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.ஊரடங்கு தொடக்கத்திலேயே வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருக்கலாம்.ஆனால்,அவர்களை இங்கேயே தங்க வைத்து,அவர்களுக்கு வேலையும் இன்றி,வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை,தற்போது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் திட்டமும் சரிவர செயல்படுத்தப்படவில்லை. போதிய ரயில்கள் இயக்கப்பட வில்லை. அவ்வாறு இயக்கப்படும் ரயில்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அச்சத்தில் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்துசெல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் மனிதநேயம் இல்லாமல் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்றார்.


காமராஜர் வழிவந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மதுவிலக்கு சாத்தியமில்லை என கூறுகிறீர்களே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு: நான் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் சட்ட விரோத கும்பல் அதிகரித்துவிடும். கள்ளச்சாராயம் பெருகிவிடும். மாற்று போதை முயற்சியில் சேவிங் லோசனை குடித்து  புதுகை மாவட்டத்திலே இருவர் உயிரிழந்துள்ளனர். எது சாத்தியமோ அதை பேசுவேன்.நான் உண்மை பேசுவதற்கு ஒரு போதும் வெட்கப்பட மாட்டேன் என்று பதிலளித்தார் கார்த்தி சிதம்பரம்.


Top