logo
திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் விழா ரத்து

திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் விழா ரத்து

13/Nov/2020 09:21:18

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில், கடற்கரையில் சூரசம்ஹாரம் ரத்து செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.


திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 15-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் 20-ஆம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 21-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இவ்விரு உற்சவங்களைக் காண, பல்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள். 

ஆனால் ஊரடங்கு தொடர்வதால் இவ்விழா குறித்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சூரசம்ஹாரம் ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோயில் அருகில் உள்ள கடற்கரையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு கொரோனா பரவலால், கோவில் பிரகாரத்திலேயே சூரசம்ஹாரம் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியிலும் 21-ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண வைபவத்திலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கோயிலுக்குள் மற்றும் கோயில் வளாகத்தில் தங்கவோ, அங்கபிரதட்சணம் செய்யவோ, திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள், மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு செய்துதங்கவோ, கடற்கரை பகுதிக்கு செல்லவோ அனுமதி இல்லை. 

சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்கள் தவிர, மற்ற நாட்களில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தினமும் 10,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் 50 சதவீதம் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களும், 50 சதவீதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படுவர். சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Top