logo
உயர்நீதிமன்ற ஆலோசனைப்படி கல்வித் துறைக்கு மாவட்டம் தோறும்  வழக்குரைஞர் நியமிக்க அரசு முன் வருமா?: கல்வியாளர் அ. ஜனார்தனம்.

உயர்நீதிமன்ற ஆலோசனைப்படி கல்வித் துறைக்கு மாவட்டம் தோறும் வழக்குரைஞர் நியமிக்க அரசு முன் வருமா?: கல்வியாளர் அ. ஜனார்தனம்.

13/Nov/2020 12:58:19

புதுக்கோட்டை:  கல்வித் துறையில் சில ஆண்டுகளாக நீதி மன்ற தீர்ப்புகளை உரிய காலத்தில் நடைமுறைப் படுத்தாததால் மாவட்ட அலுவலர்களுக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றறன.  நீதி மன்றத் தீர்ப்புகளை உடனுக்குடன் அமல்படுத்தாத காரணத்தால் அலுவலர்கள் மீது  நீதி மன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. மேலும் மாதந்தோறும் கல்வித் துறை பல புதிய வழக்குகளை சந்தித்து வருகின்றன. ஏற்கனவே ஆயிரக் கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. 

கல்வித் துறையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டைரக்டர் ஆப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஸன் என்ற  பெயரில் இயங்கி வந்த கல்வித் துறை தற்போது, பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை,  மெட்ரிக் பள்ளிகள். பொது நூலகத் துறை, ஆசிரியர் தேர்வு வாரியம்,  அனைவருக்கும் கல்வித் திட்டம், ஆர;.எம்.எஸ்.ஏ திட்டம்,  ஆசிரியர் தேர்வு வாரியம், மாநில வயது வந்தோர்  கல்வித் திட்டம் என பல்வேறு  துறைகளாக தனித் தனியே பிரிக்கப்பட்டு அந்தந்த துறைகள் தனித் தனி  இயக்குநர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் பொது நூலகங்கள் நர்சரி பள்ளிகள், துவக்கப்பள்ளிகள்,  உயர்துவக்கப்பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அரசு மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும், மெட்ரிக் பள்ளிகளுக்கென தனி இயக்ககம் செயல்பட்டு வருகிறது.

மேற்கண்ட பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரும் இப்பள்ளிகளின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதற்காக அமைச்சுப் பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் துவக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தும் போதும் புதிய ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

மேற்கண்ட துறைகளின் கீழ் மாவட்டம் தோறும் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசுத் தேர்வுகள் துறை மாவட்ட அலுவலகம், பொது நூலகத் துறைக்கான மாவட்ட அலுவலகம், மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலகம் ஆர்.எம்.எஸ்.ஏ. அலுவலகம். போன்ற அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்த அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள்,  பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் தங்களது நியமனம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு  போன்ற கோரிக்கைகளுக்கு நிவாரணம் வேண்டி மாவட்ட நீதிமன்றங்களையும் சென்னை மற்றும் மதுரை உயர்நீதி மன்றங்களிலும் வழக்கு தொடர்வது அதிகரித்து வருகிறது. இது போன்ற ஆயிரக்கணக்கான வழக்குகள் கல்வித் துறையில் நீதிமன்றத்  தீர்ப்புக்காக காத்திருக்கின்றன.

இந்த வழக்குகளில் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்கள், துறையின் மாநில இயக்குநர்கள் மற்றும் கல்வித் துறை அரசுச் செயலாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்குகள் தொடர்பாக வாதிகளின் மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் பிற பிரதிவாதிகளுக்கும் நீதிமன்றத்தின் வாயிலாக அனுப்பப்படுகின்றன. இந்த மனுக்களுக்கான பதில் மனுவை   சம்பந்தப்பட்ட முதலாம் பிரதிவாதி தயாரித்து அரசு வழக்குரைஞர் மூலமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு நடத்துவது என்பது வழக்கமான நடைமுறையாகும். 

இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை சம்பந்தப்பட்ட அலுவலகத்தைச்  சார்ந்த அமைச்சுப் பணியாளரே தயாரிக்கின்றார். இவர்களில் சிலர்  பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்கள். பலர்  பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களாக இருந்தாலும் சட்டம் படித்தவர்கள் கிடையாது.

ஆனால் இவர்கள்  தங்களது பணி அனுபவத்தின் அடிப்படையிலும் பதில் மனுவுக்குத் தேவையான அரசாணைகளைக் கொண்டும் பதில் மனுவைத் தயாரித்து அந்த மனுவை அரசு வழக்கறிஞரின் ஒப்புதலினைப் பெற்று பின்னர் நீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கான இறுதி எதிர் மனுவினைத் தயாரித்து அரசு வழக்குரைஞர் மூலமாக நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடத்தப்படுகிறது.

அரசு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞருக்கு அரசு அனுமதிக்கும் கட்டணம் மிகவும் குறைவே. ஆனால் வாதியின் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டு வழக்காடும் வழக்குரைஞருக்கு வாதி கொடுக்கும் தொகை அதிகமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கு தொடர்பாக எந்த ஒரு அலுவலருக்கும் உரிய சட்ட ஆலோசனை கிடைக்காத நிலையில், சட்டமே படிக்காத அமைச்சுப் பணியாளரைக் கொண்டு பதில் மனுவைத் தயாரிக்க நேரிடுகிறது. எனவே, பிரதிவாதிகளுக்கு வழக்கு தொடர்பான எந்த ஒரு ஆலோசனையும் கிடைக்காத காரணத்தால் அரசு எதிர்நோக்கும் பெரும்பாலான வழக்குகளில் அரசுக்கு எதிராகவே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

 மேலும், நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ரீதியிலான அலுவலர்களுக்கு  சரியான சட்ட ஆலோசனைகள் கிடைக்காத நிலையில் பிரதிவாதிகள் நீதி மன்ற அவமதிப்பு வழக்குகளை சந்திப்பதுடன் நீதிமன்றம் விதிக்கும் அபராதத் தொகையையும் செலுத்தக் கூடிய அவல நிலை தொடர்ந்து வருகிறது. 

இதைத்தவிர்க்க, கல்வித் துறையில் வழக்குகளுக்கான பதில் மனுவைத் தயாரிக்கும் பணியில் அமைச்சுப் பணியாளர்களை ஈடுபடுத்துவதைக் கைவிட  வேண்டும் எனவும் அரசு சார;ந்த வழக்குகளை கவனிப்பதற்காக  மாநிலத் தலைமை அலுவலகங்களில் ஒரு வழக்குரைஞரையும். மாவட்ட அளவில் கல்வித் துறையின் எட்டு துறைகளுக்குமான வழக்குகளை நடத்துவதற்கான மாவட்ட அளவில் வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் கல்வித் துறையின் செயலருக்கும் கோரிக்கை மனு அளித்திருந்தேன்.

ஆனால், இதுவரை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்ததன் விளைவு இன்றைய தினம் உயர்நீதி மன்றத்தில் இரு வேறு வழக்குகளில் மாவட்ட அலுவலர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பினை உரியகாலத்தில் நடைமுறைப்படுத்தாததால் அபராதங்களை விதிக்கப்பட்டது.மேலும், வழக்கு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு வழக்குரைஞர்கள்  நியமிக்கப்படமாட்டார்களா என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது பள்ளிக் கல்வித் துறையிலிருந்து (ந.க.எண் 14046 அ5- இ1- 2016 நாள் 03.11.2020) வெளியிடப்பட்ட   செயல்முறைகளில் பள்ளிக் கல்வித் துறைக்கெதிராக தொடரப்படும் வழக்குகள் மீது உரிய காலக் கெடுவுக்குள்  துரித நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் வழக்குகளை  தொடர்ந்து கண்காணிக்க முடியாத நிலையிலும்தான் கல்வித்துறைக்கு பாதகமாக தீர்ப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.

அவ்வாறான தீர்ப்புகளின் மீது தொடர்புடைய விதிகளைச் சுட்டிக்காட்டி மேல்முறையீடு  சீராய்வு மற்றும் சிறப்பு விடுப்பு மனு ஆகியவற்றை உடனுக்குடன் தாக்கல் செய்யப்படாமல் நிர்வாக நலனுக்கு முரணாகத் திட்டமிட்டே காலந்தாழ்த்தி தாக்கல் செய்யும் நிலையில், நீதி மன்றஙகளால் அவை ஏற்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்படுவதால் பல்வேறு வழக்குகளில் அரசுக்கு வீணான நிதியிழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இம்மாதிரியான அலட்சிய செயல்பாடுகளால் அரசளவில் உயர் அலுவலர்களுக்கு அவப் பெயர் ஏற்படுவதோடு நிர்வாகத்திற்கு தேவையற்ற இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துள்ளது.

எனவே, இனி வருங்காலங்களில் அலுவலர் மற்றும் பணியாளர்கள் கவனக் குறைவால் துறைக்கு பாதகமாக தீர்ப்பாணைகள் பெறப்படும் நேர்வுகளில் தொடர்புடைய வழக்குக்கு ஆகும் செலவினத் தொகையுடன் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பு முழுவதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்தே பெறப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் களே பொறுப்பாவார்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள ஆலோசனைகளின்படி மாவட்டந்தோறும் கல்வித் துறைக்கென தனியே வழக்குரைஞர்களை நியமிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத கல்வித் துறை, தற்போது அரசுக்கு வரும் அவப் பெயரையும் உயர் அலுவலர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு சட்டம் படித்திடாத மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்களைப் பொறுப்பாக்கி தொடர்புடைய வழக்குக்கு ஆகும் செலவினத் தொகையுடன் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பு முழுவதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்தே வசூலிக்கப்படும் என்று தெரிவிப்பது எந்தவிதத்தில் நியாயமானது என்பது புலப்படவில்லை. 

எனவே, கல்வித் துறைக்கென சட்டம் மற்றும் சட்ட நுணுக்கங்கள் அறிந்த வழக்குரைஞர்களை மாவட்டந்தோறும் நியமிக்கும் பட்சத்தில் கல்வித் துறையின் கல்வித்துறை சார்ந்த எட்டு துறைகளின் மீது தொடுக்கப்படும் எந்த ஒரு வழக்கிலும் பாதகமான தீர்ப்பு பிறப்பிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் நிச்சயம் ஏற்படாது எனவும் கல்வித் துறை வழக்குகளில் பாதகமான தீர்ப்புகள் அளிக்கப்படும்போது  கல்வித்துறை அதிகாரிகள், அலுவலர்களை பலிகடா ஆக்கும் நிலை ஏற்படாது.

 பாதகமான தீர்ப்புகள் கிடைத்தால் இந்த வழக்குரைஞர்கள் தீர்ப்புகளின் மீது தொடர்புடைய விதிகளைச் சுட்டிக்காட்டி மேல்முறையீடு  சீராய்வு மற்றும் சிறப்பு விடுப்பு மனு ஆகியவற்றை உடனுக்குடன் தாக்கல் செய்து கல்வித் துறையின் மாண்பினைக் காப்பாற்ற முடியும். எனவே விரைவில் மாவட்டந்தோறும் ஒரு வழக்குரைஞரை நியமிக்க கல்வித் துறை நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 கட்டுரையாளர்:  அ.ஜனார்தனம். எம்.ஏ.எம்.எட். ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்,மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்வித் துறை அமைச்சுப் பணியாளர நலச் சங்கம். புதுக்கோட்டை.செல் 94435 30270. 

Top