logo
சிமெண்ட் கலவை வாகனத்தில் மறைந்து சென்ற 18 பேர் கைது

சிமெண்ட் கலவை வாகனத்தில் மறைந்து சென்ற 18 பேர் கைது

02/May/2020 10:39:31

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

  இதனால் வெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

  ஆனால், வெளிமாநிலங்களில் வேலை ரீதியாக இடம்பெயர்ந்துள்ள சிலர் அங்கிருந்து சரக்கு லாரிகள், காய்கறி ஏற்றில் செல்லும் வாகனங்களில் மறைந்திருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 

  இதற்கிடையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக கட்டுமான தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

  இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஊரடங்கை அமல்படுத்தும் விதமாக அங்குள்ள தேசிய நெடுச்சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

 அப்போது அவ்வழியாக வந்த சிமெண்ட் கலவை வாகனத்தை இடைமறித்த போலீசார் அதை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாகனத்தின் சிமெண்ட் கலவை இயந்திரத்திற்குள் சோதனை செய்த போலீசார் அதில் 18 பேர் மறைந்திருந்ததை கண்டுபிடித்தனர்.

 இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக வாகனத்தை விட்டு கீழே இறக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 

 போலீசார் நடத்திய விசாரணையில் அந்த 18 பேரும் மகாராஷ்டிராவில் இருந்து தங்கள் சொந்த ஊரான உத்திரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு செல்ல முற்பட்டது தெரியவந்தது. 

போலீசாரிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக சிமெண்ட் கலவை வாகனத்தில் மறைந்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 18 பேரையும் கைது செய்த போலீசார் சிமெண்ட் கலவை வாகன ஓட்டுனர் உள்பட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.  



Top