logo
2021 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டி: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

2021 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டி: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

03/Nov/2020 11:14:26

சென்னை: மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது.

3.11.2020 தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில்  சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. அதில்,  2021 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே பணிகளை தொடங்கிவிட்டன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் பணிகளை தொடங்கிவிட்டது. அக்கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் உறுதி செய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது.

 இந்நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது தொகுதி வாரியாக மக்கள் நீதிமய்யத்தின் வளர்ச்சி குறித்து கமல்ஹாசன் கேட்டறிந்தார். அப்போது பேசிய கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என்றும், வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.  இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பல அணிகளை சார்ந்த நிர்வாகிகள் என சுமார் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், சட்டமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர் சேர்ப்பு, மண்டல வாரியாக உள்ள பிரச்சனைகள், தேர்தல் வியூகம், பிரசசாரம் உள்ளிட்டவை  குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது 


Top