logo
புதுக்கோட்டையில் சேதப்படுத்தப்பட்ட திமுக பேனர்கள்:  நடவடிக்கை கோரி காவல்துறையிடம் புகார்

புதுக்கோட்டையில் சேதப்படுத்தப்பட்ட திமுக பேனர்கள்: நடவடிக்கை கோரி காவல்துறையிடம் புகார்

02/Nov/2020 11:10:13

புதுக்கோட்டை:  முததமிழறிஞர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழாவுக்காக புதுக்கோட்டை நகரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து  மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் எம். செந்தில்குமார் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில்,  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியிலு்ள்ள  மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலையை இன்று மாலை 4 மணியளவில் திறந்து வைக்கிறார். கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழியும், மிசா சட்டம் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் கலைஞர் பெயரில் தியாகச்செம்மல் விருதும் வழங்கப்படுகிறது. மேலும்,  தமிழகத்தை மீட்டெடுப்போம் என்ற சிறப்பு  பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்.  வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்தப்பொதுக்கூட்டத்தில் கட்சித்தொண்டர்கள் 600 இடங்களில்  காணொலியில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்காக, புதுக்கோட்டை பால்பண்ணை ரவுண்டானா, திருக்கோகர்ணம் மியூசியம், மேட்டுத்தெரு தலத்தார் மடம்  ஆகிய பகுதிகளில் விளம்பர பேனர்கள் திமுக வழக்குரைஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில் வைக்கப்பட்டது.  ஆனால், இந்த பேனர்களை சில சமூக விரோதிகள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். எனவே, சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மியூசியம், பால்பண்ணை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்ய வேண்டுமென தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


Top